இணைய இதழ்இணைய இதழ் 77சிறுகதைகள்

குற்றமும் மன்னிப்பும் – இதயா ஏசுராஜ்

சிறுகதை | வாசகசாலை

வாசல் திரைச்சீலை இங்கும் அங்குமாக அலைமோதி ஆர்பாட்டம் பண்ணி பிறகு சரெலெனக் குறுகிப் பிணைந்து நேர்கோடாகி மேலெழும்பி நின்று ஒரு ஸர்ப்பமாக அவளை ஏறிட்டது. அதை அலட்சியமாக இடது புறங்கையால் தள்ளிவிட்டு இரட்டைக் கதவை அறைந்து சாத்தித் தாழிட்டாள். யார் சொல்லுக்கோ அடங்கியது போல் திரை முறுக்குத் தளர்ந்து கீழிறங்கி சாந்தமானது.  

ஜன்னல் வழியாக பழுத்த இலைகளும், சருகுகளும் உள்ளே விழுந்து கூடத்தை அலங்கோலப் படுத்தியிருந்தன. ஜன்னல்களையும் மூடிவைத்தாள். பெரும் காற்றின் காரணமாக, வருகின்ற மழை உடன் விலகிவிடும் என்ற கூற்றுக்கு மாறாக மேல்தளத்தில் அது சடார் சடாரென இறங்குகிறச் சத்தம் கேட்டது.  

சுவர் கடிகாரத்தில் மணி ஒன்பதாகியிருப்பதைக் கவனித்தவாறே படுக்கையறைக்குச் சென்றவள் அச்சத்தில் ஸ்தம்பித்துப் போனவளானாள். குணா, குழந்தைப் பூரணியைத் தலைக்கு மேலாகத் தூக்கிப்போட்டு பிடித்தே விளையாட, அது அச்செய்கையால் கவரப்பட்டு கலகலவெனச் சிரித்து கொண்டிருந்தது. நிஷா தவிப்புடன் ஓடிச்சென்று அவனிடமிருந்து தன் செல்வத்தைப் பிரித்தெடுத்து அதன் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டே நெஞ்சோடு இறுக அணைத்து கொண்டாள்.  

இப்படிச் செய்யாதீங்கன்னு எத்தனை முறைச் சொல்லியிருக்கேன்அவனைக் கடிந்து கொண்டபோது அவள் விழிகளில் இருந்து பளபளப்புடன் கண்ணீர் துளிகள் கீழிறங்கின. இதனால் பதற்றமுற்றவன், உடனே அவளைச் சமாதானம் செய்கிற விதமாகச் சொன்னான். “பாப்பாவுக்கு எவ்வளவு அழகான டிரஸ் வாங்கிட்டு வந்திருக்கேன், பார்த்தாயாடீப்பாயின் மீதிருந்த அட்டைப் பெட்டியை கையிலெடுத்துக் காட்டினான். அதனுள் ஆரஞ்சும் சிவப்பும் கலந்த நிறத்தில் ஒரு கவுன் இருந்தது.  

சந்தோசத்தில் முகம் மலர குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு அது தத்துப்பித்தென்று நடந்து வருவதை ரசித்தவாறே அவன் கையிலிருக்கும் ஆடையை வாங்கினாள். “ஆஹாபாப்பாவுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு” பூரிப்புடன் குழந்தையின் மேல் படர வைத்து, இப்படியும் அப்படியுமாக அழகு பார்த்தாள்.  

அவள் மகிழ்ந்திருக்கிறாள் என்று ஆசுவாசம் கொண்டபோது, அவன் சற்றும் நினைத்திடாத வகையில், அவள் தன் கையிலிருக்கும் பாப்பாவின் உடையினை வீட்டின் மூலையினை நோக்கி வீசியெறிந்தாள். நன்றாக இருக்கிறது எனச்சொல்லி பிறகேன் இவ்வாறு தூக்கி எறிகிறாளென்று அவனுக்கு விளங்கவில்லை. தான் இப்படிச் செய்யவில்லை, தன்னை மீறி ஏதோ நடக்கிறது என்று அவள் மீண்டும் மீண்டுமாக மறுத்துரைத்ததும் குழப்பமே மிஞ்சியது. இவ்விசயத்தில் இருவரையும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயலாக அங்குச் சென்று விழுந்த அவ்வாடை அதே நேரம் குபீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. திகிலூட்டும் அந்நிகழ்வுக்குப் பிறகு, அவ்வீட்டில் அநேக துர்செயல்கள் நடந்தேறி இருந்தன.      

ஒருநாள், குணா அலுவலகத்துக்கு கிளம்பிச் சென்ற பிறகு, தரையில் விளையாட்டுப் பொருட்களைப் பரப்பிப் போட்டு அதன் முன்னே பாப்பாவை அமரச் செய்துவிட்டு நிஷா வீட்டு வேலைகளைப் பார்த்தவாறிருந்தாள். இடையிடையே குழந்தை என்ன செய்கிறது என்று கவனித்தும் வந்தாள். லாரி பொம்மை ஒன்றை எட்டிப்பிடிக்க மழலை எத்தனித்துக் கொண்டிருந்தது. அது அதன் கைக்கு அகப்படாமல் முன்னே நகர்ந்து கொண்டிருக்க, குழந்தையும் விடாபிடியாக தவழ்ந்தவாறே முயன்றது. எவ்வளவு முயற்சித்தும் அதனால் பொம்மையைப் பிடிக்க முடியவில்லை. அது இங்குமங்குமாகப் போக்கு காட்டி வளைந்து நெளிந்து சென்று சுவரில் மோதி நின்றது.  

அவளுக்கு ஆச்சரியம். அந்த லாரி பொம்மைக்கு மட்டுமல்ல, அங்கிருக்கும் எந்த பொம்மைக்கும் அவள் சாவி கொடுக்கவில்லை. ரிமோட் கண்ட்ரோலையும் பயன் படுத்தவில்லை. அப்படியிருக்கஅது எவ்விதம் ஓடுகிறது? யோசித்துக்கொண்டிருக்கும் அதே விநாடி, அங்கே இருக்கக்கூடிய குதிரை, யானை, குரங்கு, ரயில் பொம்மைகளும் அதனதன் போக்கில் வேகமெடுத்து குழந்தையைச் சுற்றி வட்டமிட்டு வலம் வருவதைப் பார்த்ததும் பீதியுற்றவள் விரைந்து சென்று பாப்பாவைத் தூக்கிக்கொண்டு அவ்விடத்திலிருந்து வெளியேறி வந்துவிட்டாள்.   

கல்யாணமான புதிதில் இவ்வீடும் இதன் தனிமையும் அவளை வெறுப்படையச் செய்தன. குணா வனஇலாகாவில் பணி புரிபவன் என்பதால் இங்கு தங்க வேண்டிய கட்டாயச் சூழல் உருவானது. இரவில் நெடும் பொழுதுக்குப் பிறகே அவன் வீடு திரும்புவான். சில நாட்களில் அதுவும் வருவதில்லை. தனியே நேரத்தை கடத்துவது அவளுக்கு அச்சத்தை உண்டாக்கியிருந்தது. சீக்கிரமாக வரசொல்லியும், இந்த வேலை வேண்டாம்சொந்த ஊருக்கேப் போய்விடலாம் என்று அடிக்கடி எரிச்சலுற்றும் மன்றாடியும் அவனால் அவற்றை நிறைவேற்ற முடிந்ததே இல்லை. ஆனாலும் என்றாவது ஒருமுறை முழுநாளும் வீட்டிலேயேத் தங்கியிருந்து அவள் சஞ்சலத்தைப் போக்கி மகிழ்வுறச் செய்து விடுவான். இப்போதைக்கு மாற்றம் நிகழப்போவதில்லை என்று நன்கு தெரிந்ததும் அன்றாடங்களில் தன் மனதைப் பழக்கப்படுத்திக் கொள்ள அவள் பிரயத்தனம் கொண்டாள்.   

ஒரு நாள் காலையில் நான்கைந்து சிட்டுக்குருவிகள் வாசலைக் கடந்து துணிச்சலுடன் வீட்டுக்குள் வந்து அப்படியும் இப்படியுமாக நடை பயின்றபடியே தரையில் சிந்திக்கிடக்கும் எவற்றையோ கொத்திக் கொண்டிருந்தன. சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்த நிஷாவுக்கு அவற்றை விரட்ட மனம் வரவில்லை. வேடிக்கைப் பார்த்தவாறிருந்தாள். பின் மெல்ல சத்தமின்றி எழுந்துச் சென்று சமைப்பதற்காக வைத்திருந்த அரிசியில் ஒரு கைப்பிடியளவு அள்ளி வந்து அவற்றிக்கு முன்பாக விசிறினாள். ஒரு கணம் அச்சத்தில் பறப்பதுப் போல சிறகடித்து மேலேழும்பிய அக்குருவிகள் மறுபடியும் தரையிறங்கி அவசர அவசரமாக அரிசியைக் கொத்த ஆரம்பித்தன. சுவராசியத்தோடு உள்ளுக்குள் லேசாக மகிழ்ச்சியும் உற்பத்தியாக உன்னிப்பாக அவற்றை கவனிக்கலானாள். இவ்வழக்கம் தினமும் தொடரலாயிற்று. குருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவளுடைய உற்சாகமும் கூடிக்கொண்டிருந்ததுமேலும் ஜன்னலினருகில் வந்தமரும் மணிப்புறாக்கள், பஞ்சவர்ணக்கிளிகள் ஆகியவற்றோடு வீட்டைச்சுற்றிக் கிளைப்பரப்பியிருக்கும் நிறைய மரங்களில் குடியிருக்கும் காடை, கௌதாரி, கொண்டலாத்தி, வானம்பாடி போன்றவற்றையும் ஓயாமல் கரையும் காக்காய்களையும் கூட அவள் ரசிக்கவும் நேசிக்கவும் தொடங்கி விட்டாள். 

மைனாவோ குயிலோ தெரியவில்லை, தினமும் சரியாக விடியற்காலை ஐந்து மணிக்கு கூக்கூவென்று பெரும் குரலில் கத்தும். அந்நேரம் உடனே விழிப்பு வந்துவிடும். சிறிது நேரம் அதன் குரலைக் கேட்டவாறே படுத்திருப்பாள். பிறகு தூங்கிப் போவதும் உண்டு. இல்லை அப்பொழுதே எழுந்து வீட்டு வேலையில் ஈடுபடவும் செய்வாள்.  

அப்பகுதியில் இருக்கும் பத்துக்குள்ளான வீடுகளுக்கென்று ஒரு பூங்கா அவள் வசிப்பிடத்திலிருந்து மிக குறைந்த தொலைவில் இருந்தது. சில நாட்களில் மாலை நேரங்களில் அங்கு செல்வதுண்டு. பெரும்பாலும் குழந்தைகளே விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒருசில பெண்களை அவ்வப்போது பார்ப்பதுண்டு. அவர்கள் இரண்டு மூன்று பேராக உட்கார்ந்து ஏதாவது அரட்டையடித்து கொண்டிருப்பார்கள்அவர்களுடன் சேர்ந்து கொள்ள அவளுக்குத் தோன்றியதில்லை. அவர்களும் இவளையழைத்துப் பேச முயன்றதில்லை. இதுபோக வயதானவர்களை அவள் ஒரு நாளும் பார்த்தது இல்லை. இங்கு முதியவர்களே இல்லையா என்று நினைக்கவும் செய்தாள்.  

வழி தவறிய முயல் குட்டிகள் சில மெதுமெதுவென்ற உடல் வாகோடு தத்தித்தத்தித் திரிவதைக் காணும் போது ஆனந்தமாக இருக்கும். அவற்றில் ஒன்றையாவது பிடித்து விடவேண்டுமென முயற்சிக்கையில் அவைகள் அவளது கைகளில் அகப்படுவதேயில்லை. இது ஏமாற்றமாக இருந்தபோதிலும் இவ்விளையாட்டுப் பிடித்திருக்கவே செய்தது.  

ஒரு முறை இரண்டு மான்கள் அவள் வீட்டின் வழியாக ஓடுவதைப் பார்த்தாள். பிரமிப்பாக இருந்தது. அன்றிலிருந்து காட்டு விலங்குகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மூண்டது. அவளது தொணதொணப்புத் தாளமுடியாமல் குணா அவளை ஒருநாள் ஜீப்பில் காட்டுக்குள் அழைத்து போனான். காட்டின் எல்லையிலிருந்து ரொம்ப தூரம் உள்ளே சென்று விடாமல் எச்சரிக்கையாகவே இருந்தான்வேகமின்றி மெதுவாகச் செல்லும் ஜீப்பிலிருந்து முள்ளம்பன்றி, ஒட்டகஞ்சிவிங்கி, கரடி, காட்டெருமை, ஓநாய், மிளா போன்றவற்றைக் கண்டாள். நிறைய பறவையினங்களையும் பார்க்க முடிந்தது. அத்தோடு அருவி, காட்டாறு, சிற்றோடை ஆகியவற்றையும் பார்த்து அதிசயித்தாள். சிங்கம், புலி, யானை இவைகளைக் காண முடியவில்லையே என்ற வருத்தத்தைத் தவிர அன்றைய நாளின் அனுபவம் அவளுக்கு மனநிறைவை அளித்தது.  

அதன் பிறகு அவன் வேண்டாமென்றுச் சொல்லியும் கேளாமல் தனியே தோளில் கேமராவை மாட்டிக்கொண்டு வனத்துக்குள் சென்று விடுவாள். நிதானமாக நடந்து இயற்கையழகை ஒவ்வொன்றாக ரசித்து கேமராவில் உள்வாங்கிக் கொள்வதில் பரவசம் ஏற்படும். மரங்களின் குறுகிய இடைவெளியில் புகுந்து செல்கையில் ஆதவனின் ஒளி பிரவாகம் சல்லடைத் துளைகளாக கீழிறங்குவது மயக்கத்தைத் தருவிக்கும். மேலே செல்ல வேண்டாமென்று குணா வற்புறுத்திச் சொல்லியிருக்கும் பகுதிகளை அனாயசமாகக் கடந்து முன்னேறிப் போவாள். நெஞ்சில் அச்சம் நிலவாமல் இல்லை. ஆனாலும் இன்னும் இன்னும் என ஒரே நாளில் அவ்வனத்தின் எழிலையெல்லாம் அள்ளிப் பருகிடும் பேராவலோடு அலைந்திடுவாள். ஒரு சமயம் அறியாமல் பருத்த மலைப்பாம்பொன்றைத் தீண்டி விட்டு வெலவெலத்து போனாள். அந்நடுக்கம் மறைய நெடுநேரமானது. அது போல ஏலெட்டு யானைகளை மிக சமீபத்தில் கண்டுவிட்டு மிரண்டு போனாள். புதர்களில் ஒளிந்து அவைகள் கடந்து சென்ற பின்னரே வெளிவந்தாள். புலியையும் சிங்கத்தையும் காணாவிடினும் அவைகளின் உறுமலை எங்கோ தொலைவில் கேட்பதை அவதானிக்க முடிந்தது.  

எடுத்த படங்களையெல்லாம் அருகாமையிலிருக்கும் டவுனுக்குச் சென்று பிரிண்ட் போட்டு வருகையில் மிகுந்த சந்தோசமடைவாள். ஒவ்வொன்றையும் குணாவிடம் காட்டி அகமகிழும் வேளையில் அவளது உற்சாகத்தின் கால்வாசியைக்கூட அவன் முகம் பிரதிபலிக்காததைக் கண்டு வாட்டமுண்டாகும். ஆனாலும் அதை கருத்தில் கொள்ளாமல் அடுத்த முறையும் காட்டுக்குள் பயணித்து விடுவாள்.  

முதல் மகள் சுசி வயிற்றில் இருக்கும் நான்கு மாதங்கள் வரை அவள் இவ்வாறு காட்டுக்குள் திரிந்து கொண்டிருந்தாள். பின்னர் சோர்வு காரணமாக போவதை நிறுத்தி கொண்டாள். குழந்தை பிறந்தவுடன் அது தன் வாழ்வின் வசந்தகாலம் என மகிழ்ந்து போனாள். ஆனாலும் அந்த சந்தோசம் தொடர்ந்து நீடிக்கவில்லை. தவழ்ந்து விளையாடிய குழந்தை ஏழு மாதத்திலேயே மரணமடைந்துவிட சோகம் அவளைக் கௌவிக்கொண்டது. அதிலிருந்து விடுபட முடியாதவளானாள். பூரணி பிறந்த பின்னரும் அச்சம் அவளை விட்டு அகலவில்லை. எந்நேரமும் குழந்தையை தன் கண் பார்வையிலேயே வைத்திருந்தாள். நாளாக நாளாக மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தவளுக்கு இப்பொழுது மறுபடியும் சோதனை துவங்கி விட்டது.             

இந்த பயத்துக்கான காரணத்தை இன்னது என்று வரையறுக்க இயலவில்லை. விளங்கிக் கொள்ள முடியாத புதிரான குழப்பமிகுந்த மனநிலைக்கு ஆட்பட்டு நரக வேதனையோடு நாட்களைக் கடத்த வேண்டியதாகிற்று. நடக்கும் எந்தவொரு காரியமும் தற்செயலானதல்ல என நிச்சயமாக உணர முடிந்தது. தன்னந்தனியே தைரியத்தோடு பயங்கரங்கள் நிறைந்த வனாந்தரத்துள் அலைந்துத் திரிந்தவளுக்கு இந்த சிறிய வீட்டுக்குள்ளே வாசம் செய்ய நடுக்கம் ஏற்பட்டிருந்தது. எப்பொழுதும் தன்னை யாரோ கண்காணிப்பதுப் போலவும், சில நேரங்களில் முதுகுக்குப் பின்னே நின்று புஸ் புஸ் என்று எவரோ பெருமூச்சு விடுகிறது மாதிரியும், தூங்கி எழும் வேளையில் அவ்வளவு நேரமும் படுக்கையின் அருகே இருந்துவிட்டு அப்பொழுதுதான் சட்டென்று யாரோ நகர்ந்து மறைவது போலவும் அவளுக்குத் தோன்றும். சில பொழுதுகளில் அழுகையும் சிரிப்புமானச் சப்தங்கள் அருகாமையில் கேட்கவும் செய்தது.

இங்கே ஏதோவொன்று இருக்கிறது என்ற அனுமானத்தைத் தாண்டி அடுத்தடுத்த நாட்களில் தெளிவில்லாத ஒரு உருவத்தை பார்த்தாள். அப்படியான சமயங்களில் அலறுவதற்குக்கூட திராணியின்றி குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடி நின்று கொள்வாள். அன்று நடந்த நிகழ்ச்சி எல்லாவற்றுக்கும் உச்சமாக இருந்தது.  

தொட்டிலில் உறங்கிய குழந்தை விழித்து கொண்டு சிணுங்கியது. சமையலறையில் இருந்து வெளிப்பட்டு தூளியை நெருங்குவதற்குள் அதன் அழுகை பெரிதானது. வந்துட்டேன் தங்கமென குரல் தந்தபடியே அவள் குழந்தையைத் தூக்க முயல்கையில் எவராலோ தள்ளி விடப்பட்டது போல் பின்புறம் சரிந்து விழுந்தாள். அத்தோடு தொட்டில் தானாகவே ஆடத்தொடங்கியது. முதலில் மெதுவாக ஆடத்துவங்கி பிறகு வேகமெடுத்து கூரையைத் தொட்டு விடுவது போல் ஏறி இறங்கியதைக் கண்டதும் பீதியடைந்தாள். நிகழும் விபரீதங்கள் அனைத்தும் குழந்தையைக் குறி வைத்தே நடக்கிறது என தெள்ளத்தெளிவாக புரிந்தது. தன் உயிரைக் கொடுத்தாவது பாப்பாவை காப்பாற்றி விடவேண்டும் என்று தீவிரமானித்து தூளி அவள் பக்கமாக வருகிறபோது விரைந்து சென்று அதனை இறுகப்பிடித்து கொண்டாள். தரையில் உடல் சரிய இழுத்து கொண்டே போவதும் வருவதுமாய் இருக்கையில் சமயம் பார்த்துத் துள்ளியெழுந்து மகளை அழுந்த பிடித்து வெளியே கொண்டு வந்தவள் நிலைத்தடுமாறி அதனோடு இரண்டு மூன்று முறை உருண்டு புரண்டு சுவரின் மூலையில் போய் விழுந்தாள். படபடப்போடு நிமிர்ந்து குழந்தையை நெஞ்சோடு அணைத்தவாறே ஒடுங்கி கொண்டாள்.  

சற்றுமுன் பேய்த்தனமாடியத் தூளி தளர்ந்துத் தொங்கிக்கொண்டிருந்தது. நிஷா அதை கண்ணிமைக்காமல் பார்த்தபடியே அசைவற்றிருந்தாள். இங்கிருந்து வெளியே போய்விட்டால் இப்பேராபத்திலிருந்து தப்பித்து விடலாம் என்ற எண்ணம் தோன்றினாலும், எப்படி வெளியேறுவது, அதற்குள் ஏதாவது அசம்பாவிதம் சம்பவித்து விடுமோ என்று அஞ்சினாள். பயந்து கொண்டிருப்பதால் ஆகப்போவது ஒன்றில்லை என்ற நோக்கில் மெல்ல எழுந்து அவ்விடத்திலிருந்து அகன்றுவிட உத்தேசிகையில் சுவரில் சாய்வாக அந்நிழல் தெரிந்தது. எதிரே உருவமேதும் இல்லாமல் சுவரில் நிழல் மட்டுமே வியாபித்திருந்தது. ரெட்டை ஜடைப் பின்னலோடு இருந்த அது சிறுமியினுடையதா வளர்ந்த பெண்ணினுடையதா என்று இனம் காண முடியவில்லை. மெல்லிய அழுகை சத்தம் அந்நிழலில் ஊடாக வெளிப்பட்டது. இப்பொழுது அது அவளை நோக்கி நெருங்கி வர கதிகலங்கிப் போனவளாக சுவரோடு சுவராய் ஒட்டிக்கொண்டாள். அதன் கைகள் நீண்டு அவள் முகத்தில் இறங்கியதும்வீல்லென்று அலறினாள். இடது கன்னத்தில் கொடூரமாகக் கீறல் விழுந்து குருதி வடிந்தது. அடுத்து வலது கன்னத்திலும் கூரிய நகங்கள் பதிய வலியில் வீறிட்டாள். மேலும் குழந்தையின் கழுத்தை நெரிப்பது போல அதன் கைகள் கீழிறங்கி வருவதைக் கண்டதும் ஸ்தம்பித்து போனாள். உடனடியாக குழந்தையின் ஒரு அங்கமும் வெளியேத் தெரியாதவாறு மூடி தனக்குள் அவள் மறைத்து கொண்டாள். இறுக கண்களை மூடிக்கொண்டு இப்பேராபத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற வேண்டுதலை முணுமுணுத்தாள்.  

இறுக அணைத்திருந்ததால் குழந்தை உறக்கம் கலைந்து அழத்தொடங்கியிருந்தது. பேசாமல் இரு சாமி என்று அதனைத் தேற்ற வழியின்றி மூடிய கண்களோடு மேலும் இறுக்கிக் கொண்டாள். மழலையில் சத்தம் இன்னும் அதிகரித்தது. அதே நேரம் அவ்விடத்தில் குழந்தையின் அழுகையைத் தவிர சற்று முன்னர் கேட்ட கொடூரமான இரைச்சல்கள் ஏதும் இல்லாதிருப்பதை அறிந்து தயக்கத்துடன் விழிகளைத் திறந்து பார்க்க சுவரில் அந்த நிழல் காணாமல் போயிருந்தது. துரிதமாக எழுந்து வெளியே ஓடி வந்தாள். கதிரவன் மறைகிற நேரமாக அது இருந்தது.  

மறுபடியும் வீட்டினுள் செல்லவே கூடாது என்ற நினைப்போடு குணா பணி புரியும் காட்டிலாக்கா அலுவலகத்துக்குப் போகிற தார்சாலையில் ஓட்டமும் நடையுமாக முன்னேறினாள். அவள் அங்கு சென்றுச் சேர்ந்தபோது குணா இல்லை. வனத்துக்குள் சென்றிருப்பதாகவும் இப்பொழுது வருகிற நேரந்தான் என்றும் அங்கிருந்த ஊழியர் சொன்னார். பூரணியைத் தோளில் போட்டு தட்டிக்கொடுத்தபடியே வெளியே வந்து ஜீப் வருகிறதா என்று பாதையை வெறித்தாள்.  

முக்கால் மணி நேரத்துக்குப் பிறகே அவன் வந்தான். வண்டியை விட்டு இறங்கும் முன்னரே அவள் விரைந்து சென்று அவன் தோளில் சாய்ந்து அழத்துவங்கினாள். காரோட்டியும், சகஅதிகாரிகளான ஆபிரகாமும், நிஜாமும் இருக்க அவள் இவ்விதம் நடந்து கொண்டது அவனுக்கு சங்கடத்தை உண்டாக்கியது. ஆயினும் அம்மூவரும் இரக்கத்தோடு அவளைப் பார்த்துவிட்டு என்னவென்று விசாரி என்கிற பாவத்தோடு விலகிச் சென்றார்கள்.  

இனி ஒரு நிமிடம் கூட அந்த வீட்டில் இருக்க முடியாது. இந்த வேலையே வேண்டாம். புறப்பட்டு விடுவோம்அவள் பிதற்ற தொடங்கினாள். அவன், அவள் சொல்வது அனைத்தையும் கேட்டுக் கொண்டு சற்று அமைதியாக இருந்தான். எப்படி ஆறுதல் சொல்லி அவளை சாந்தப்படுத்துவது என்று தெரியவில்லை. காட்டுக்குள் சென்று டென்ட் அடித்து தங்கி இரண்டு மூன்று நாட்களுக்கு கவனிக்க வேண்டிய முக்கிய வேலைகள் இருக்கு என எவ்வளவுச் சொல்லியும் அவள் இணங்கவில்லைவீடு வந்து ஒரு வழியாகப் பேசி அவளைத் தணிய வைத்தான். ஆபிரகாமும் தன்னுடன் வருவதால் அவனுடைய மனைவி ரோஸியை இரண்டு நாட்களுக்கு அவளுடன் தங்கச் செய்துவிட்டு தன் குழுவுடன் மறுபடியும் காட்டுக்குள் போய்விட்டான். 

கையில் பைபிளை ஏந்தி சாந்த சொரூபத்துடன் ரோஸி தன் வீட்டில் நுழைவதைப் பார்த்ததும் இதுவரை தன்னை வாட்டியெடுத்த அச்சம் ஓரளவு குறைந்தது போலிருந்தது அவளுக்கு. ரோஸி வந்தவுடன் முதலில் தான் கொண்டு வந்திருந்த வேளாங்கண்ணி தேவாலயத்தின் புனிதநீர் அடங்கியப் பாட்டிலைத் திறந்து வீட்டின் வெளியிலும் உள்ளுமாகத் தெளித்துவிட்டுஜீசஸின் படத்தை மேஜையில் வைத்து சிலுவைக் குறியிட்டுக் கொண்டு மண்டியிட்டு பிராதித்தாள். நிஷாவை எதிரில் அமர செய்து விவிலியத்தின் வசனங்களை உரக்க வாசித்து அவளையும் உச்சரிக்குமாறுக் கேட்டுக்கொண்டாள். அந்த வசனங்கள் நிஷாவுக்கு எளிதாக புரிந்தன. அதன் ஒவ்வொரு வார்த்தைகளையும் சொல்லும் போது உடல் சிலிர்ப்பதை உணர முடிந்தது. அன்புள்ளம் கொண்ட இனிய சகோதரியாக ரோஸி அவளுடன் பழகினாள். அந்தப் பொழுதுகள் இனிமை நிறைந்ததாகவும், தான் மிகுந்த சந்தோசத்தில் நிறைந்திருந்ததாகவும் நிஷா மனம் திறந்து சொன்னாள். ரோஸி அங்கிருந்த மூன்று நாட்களும் அவ்வீட்டில் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழவில்லை. இனியும் அப்படி ஏதும் ஏற்படப்போவதில்லை என்று உறுதியளித்துவிட்டு போனாள்.

அவள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி ஒரு வாரம் கடந்திருந்த நிலையில், ஒரு நாள் நள்ளிரவில் திடீரென விழிப்பு வந்து கண் விழித்தாள். தங்கள் படுக்கைக்கு அருகே யாரோ நின்றிருப்பதை அவளால் பார்க்க முடிந்தது. சடாரென எழுந்து உட்கார்ந்தாள். நாலைந்து வயது இருக்கும் அந்த சிறுமிக்கு. இவளையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். அவளுடைய முகச்சாயல் இவளுக்குள்ளே புகுந்து ஏதேதோ ஞாபகங்களைக் கிளறிவிட்டன. அச்சிறுமிஅம்மாஎன்று அழைத்தே இன்னும் நெருங்கி வந்தாள். பூகம்ப அதிர்வை தனக்குள்ளாக வாங்கிக்கொண்டவள், வாயைத் திறந்து எதுவோ சொல்ல முயன்றாள். வார்த்தைகள் ஒன்றும் வெளிவரவில்லை. இப்போது அச்சிறுமியின் முகம் விகாரமானது. தாவி இவள் மீது உட்கார்ந்து அசுர பலத்துடன் கழுத்தை இறுக்கினாள்.

சுவாசிக்க கடும் பிரயத்தனம் கொண்டு வேகவேகமாக இழுத்துவிடும் மூச்சில் தன்னுயிர் தன்னைவிட்டு நீங்கி விடுமோ என்று நிஷா பயந்தாள். கால்களை வலுவுடன் மடக்கி உதறியும், கைகளை இருபுறமாகத் துலாவியும் மரணத்தின் விளிம்பில் ஊஞ்சலாடுகிற பரிதவிப்பை அவள் முகம் பலவிதமாகப் பிரதிபலித்தது. இடைவிடாத முயற்சிக்குப் பலனாக அவளருகில் படுத்திருந்த குணாவின் நெஞ்சின் மீது அவள் கை விழுந்து பிராண்டியதும் அவன் திடுக்கிட்டு விழித்தான். பதற்றத்துடன் எழுந்தவன் அவளது புஜங்களைப் பற்றிநிஷாநிஷாவென்று உலுக்கியதும் ஆக்கிரமித்திருந்த சிறுமியின் பிடிதளர்ந்து முற்றிலுமாக விடுபடவென அலறலுடன் எழுந்தமர்ந்தாள்.

சுசி பிறந்தபோது தேவதையே வந்து அவதரித்திருப்பதாக அவர்கள் சந்தோசம் கொண்டிருந்தார்கள். தங்களுடையப் பெரும் பொழுதுகளை அதனுடனே கழித்தார்கள். அன்றைக்கு ஒருநாள், குணா கணினியின் உட்கார்ந்து அலுவலக வேலையில் மூழ்கியிருந்தான். அவனிடம் குழந்தையைத் தூக்கி வந்து சிறிது நேரம் பார்த்து கொள்ளுமாறு நிஷா சொன்னபோது நிறைய வேலை இருப்பதாகவும், தன்னைத் தொந்தரவு படுத்த வேண்டாமென்றும் அவன் எரிச்சலுடன் சொன்னான். அவள் முகம் வாட அங்கிருந்து நகர்ந்துச் செல்வதைப் பார்த்ததும் வருத்தம் மேலிடவேச் செய்தது. ஒரு அரை மணி நேரம் இருக்கும். “ஐயோஎன்ற அவளது அலறல் சத்தம் கேட்டு பதறியெழுந்து உள்ளறைக்கு ஓடினான். கட்டிலுக்குக் கீழே சுசி குப்புற விழுந்து கிடந்தது. தலைப்பகுதியைச் சுற்றிலும் ரத்தக்குளமாக இருந்தது. பார்த்ததுமே கிர்ரென்று மயக்கம் வருகிறதைப் பொருட்படுத்தாமல் குழந்தையை அள்ளியெடுத்தான். அதன் உயிர் பிரிந்திருந்தது. வேலைக்காரி சரோஜாவைப் பார்த்து கொள்ளும்படிச் சொல்லிப் போனதாகவும் அவளது அஜாக்கரதையால் தன் மகள் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மாண்டுப் போனாளென்றும் நிஷா பெரும் குரலில் அழுதவாறுச் சொன்னாள். நடுங்கிய நிலையில் நின்றிருக்கும் வேலைக்காரியைப் பார்த்தான். ரத்தம் கொதிப்படைந்தது. எழுந்து ஓங்கி அறைந்தான். ச்சீ நாயே வெளியே போடி என அவள் கழுத்தைப் பிடித்து வாசல் தாண்டி தள்ளிவிட்டான். 

பிறகு வந்த நாட்கள் நரக வேதனையில் கடந்தன. பல ஆண்டுகளுக்குப் பிறகு பூரணி பிறந்த பிறகே அவர்களது துயரம் ஓரளவு குறைந்தது. அதன் மிச்சம் இன்னும் மறையாதிருக்கிற சூழலில் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் அபாயகரமான நடமாட்டங்கள் மேலும் அவர்களை திணர வைத்தன. இதற்கெல்லாம் காரணம் சுசியின் ஆவியே என்று நிஷா சொன்னதை குணாவால் ஜீரணிக்க முடியவில்லை. முட்டாள் தனமாகப் பேசாதே என்று அவளைக் கடிந்து கொண்டாலும் அவள் படுகிற இன்னல்களைச் சகித்து கொள்ள முடியாது வேறு ஊருக்கு மாற்றலாகும் ஏற்படுகளைச் செய்து முடித்தான்

அவர்கள் இங்கிருந்து புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக வருகிற பூரணியின் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று அவன் விரும்பினான். அரை மனதோடு அவளும் ஒப்புக்கொண்டாள்.

ஞாயிற்றுக் கிழமையின் போது அப்பிறந்தநாள் வந்தது. தன் நண்பர்களுடன் சேர்ந்து குணா அவ்வீட்டை மிக சிரத்தையுடன் அலங்கரித்திருந்தான். நேரம் செல்லச் செல்ல விருந்தினர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கியிருந்தார்கள். வலிந்து புன்னகையை வரவழைத்து கொண்டு நிஷா அவர்களை வரவேற்று உபசரித்தாள். ரோஸி வந்தபோது அவளை இறுக தழுவிக்கொண்டாள்.  “உன் மனசு எனக்கு புரியுது. சாந்தமா இரு. சீக்கிரம் எல்லாமும் சரியாயிடும்அவள் அனுசரனையோடு இவளுக்கு ஆறுதல் சொன்னாள். 

மெழுகுவர்த்திகளை அணைத்து, குழந்தையின் கையால் கேக் வெட்டி அதற்கு நிஷா ஊட்டிவிடுகிற சமயம் எதிர்பாராத அந்த வெறிச்செயல் துவங்கியது. ம்மாஎன்று அலறியபடியே பூரணி கீழே சாய்ந்தது. அதன் கால்கள் இரண்டையும் பிடித்துத் தரதரவென்று இழுத்து கொண்டிருந்தது சுசியின் ஆத்மா. அவளைத் தவிர சுசியின் தோற்றம் அங்கிருக்கும் எவர் கண்களிலும் தென்படவில்லை. ஆனாலும் அமானுஷியமாக ஏதோ நடக்கிறது என்பதை மட்டும் நன்கு உணர்ந்திருந்தார்கள். குணா விரைந்தோடி பூரணியை அழுத்தமாகப் பிடித்து கொள்ள முயன்றான். அவனால் அது முடியவில்லை. நெஞ்சம் கதற கதற இதனைப் பார்த்த நிஷாவுக்கு தன் மகளை காப்பாற்ற சுசியிடம் சரணாகதி அடைவதைத் தவிர வேறு விழியில்லை என்பதை உணர்ந்து கொண்டாள்.   

தன் முதல் மகளின் முன்னேச் சென்று நின்றவாறு தீர்க்கமான குரலில் சொன்னாள்

உன் ஒரு வயசில விளையாட்டுத் தனமா உன்னைத் தலைக்கு மேலே தூக்கிப் போட்டுப் பிடிச்சு கொஞ்சிறப்ப என் கவனக் குறைவால் நீ பின் பக்கமாக கீழே விழுந்து மண்டையுடைஞ்சு செத்துப்போனாய். நான் பயத்தோட செய்வதறியாம அந்த பழிய வேலைக்காரி சரோஜா மேலப் போட்டு தப்பிச்சிக்கிட்டேன். நான் பண்ணுனது பெரிய பாவம்தான். அதற்காக என்னோட உசிர எடுத்திடு சுசி. தயுவு செஞ்சு உன் தங்கச்சிய விட்டிடு

நிஷா மண்டியிட்டு பெரும் குரலில் அழுதாள். நிமிடங்கள் சன்னமாக நகர சுசியின் பிடி கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வது தெரிந்தது.

**********

idhayayesuraj@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button