இணைய இதழ் 128சிறுகதைகள்

பச்சச் சட்ட – உதயா சக்கரவர்த்தி

லாரி திடுமென்று நின்றதில் தலை கம்பியில் மோதிய வலியில் “..க்காலி லாரி ஓட்றானா, மாட்டு வண்டி ஓட்றானா” எனத் தன் தலையைத் தேய்த்துக்கொண்டே கத்தினான் வீரராஜா.

“அண்ணோவ் சவுண்டு விடாத, ஓட்டுறது உன் பங்காளி இல்ல, ஓனரு”

“யாரா இருந்தா என்னடா” என்றபோது இயல்பாகவே குரல் பம்மியிருந்தது.

சிரித்தான் கிச்சா. அதற்குள் “இந்தாங்கடா பேசிக் கிழிச்சதுபோதும் பொம்மையெல்லாம் உடையாம இறக்கி வைங்க, சேட்டு உப்பர் மே ஜாவ், பொம்மைய உப்பர்ல இருந்து இறக்கு” என்று கட்டளைகளை விடுத்துக்கொண்டே நடந்தான் தேவராஜ்.

சேட்டு எந்திரம் போல லாரிமேல் ஏறினான். “லேய் சேட்டு சொன்ன உடனே சுச்சு போட்ட மாதிரி ஆடாத, ரெண்டு நிமிசம் நில்லு, நாங்க பல்லு விளக்கிட்டு வரோம், இவனெல்லாம் பல்லு விளக்கி நான் பாத்ததே இல்லடா கிச்சா”

“அவனுக்குத் தமிழ் நல்லா தெரியும் ண்ணே, அப்படியே அந்தாளுகிட்ட சொல்லிடுவான்”

“சொன்னா அந்தாளு அறுத்துத் தள்ளிடுவானா, இவன் வெறும் அல்லக்கைதானே கிச்சா, என்ன சேட்டு?

சேட்டு பதில் சொல்லாமல் அப்டியே உட்கார்ந்தான். கிச்சாவும் வீராவும் லாரியிலிருந்து குதித்து இறங்கினர். வீரா, லாரியின் முன் பகுதியில் ஏறி ட்ரைவர் சீட்டருகே கை நுழைத்துத் தேடினான். இரண்டு ப்ரஷ்களும் பேஸ்ட் இருப்பதற்குச் சாத்தியமே இல்லாத ஒரு பவுச்சையும் எடுத்துக்கொண்டு கிச்சாவிடம் வந்தான்.

“இதுக்குமேல பிதுக்குனா பேஸ்ட்க்கு பதிலா ரத்தந்தாண்ணே வரும்” சொல்லிக்கொண்டே பிதுக்கினான் கிச்சா. “அதெல்லாம் வரும். பேஸ்டுங்கிறது அச்சய பாத்திரம் மாதிரி நாம தூக்கிப்போடுற வரைக்கும் தீந்துபோகாது”

கொஞ்ச தூரத்தில் குழாயடி ஒன்று வந்தது. கூட்டம் இல்லை. இருவரும் முகம், வாய் கழுவிவிட்டு, அதை ஒட்டிச் சில அடிகளில் ஓடியச் சாக்கடையில் யாரும் வருகிறார்களா எனப் பார்த்துக்கொண்டே காலை கடன்களை முடித்தனர். மீண்டும் லாரிக்கு வந்தபோது வெளிச்சம் அதிகமாகியிருந்தது.

“திருட்டுக் ..திங்க, நாசமாத்தான் போவானுக” என்று கத்திக்கொண்டே வந்தான் தேவராஜ்.

“என்னாச்சுண்ணே” என்றான் கிச்சா.

“இல்ல கிருஷ்ணா முனிஸ்பால்டில நமக்கு இந்த இடத்துலதான் கடைனு சொன்னானுக. இப்போ மார்க்கெட்டுகிட்ட போயிப் போட்டுக்க சொல்றானுக, கேட்டா பெரிய கம்பெனி பேனர் ஏதோ வைக்கப் போறானுகளாம், நாலு காசு பாக்கலாம்னா விடமாட்றானுக”

தேவராஜன் கெட்ட வார்த்தையில் திட்டியது, கிச்சா கிருஷ்ணாவானது, பணம் சம்பாதிப்பது பற்றி பேசியதெல்லாம் உண்மையான மனப் பகிர்வு அல்ல. ஏற்கனவே கீழே இறக்கிவைத்த பொம்மைகளை மீண்டும் வண்டியில் ஏற்றி, மார்க்கெட் வரை கொண்டு சென்று இறக்க வேண்டும், இதை நேரடியாகச் சொன்னால் வீரா ஏதேனும் புலம்புவான், இதுபோல பேசினால் அந்தக் கோவத்தில் அவர்களும் பங்கெடுத்துதானே வேலைகள் செய்வார்கள் என்பது தேவாவின் கணக்கு.

அதற்குள் சேட்டு சில பொம்மைகளைக் கீழே இறக்கி இருந்தான்.

“உனக்கு என்ன அவ்வளவு அவசர ..தி, ஏன் நாங்க வந்து இறக்க மாட்டோமா, நீ எவ்ளோ உழைச்சாலும் கொடுக்கறததான் கொடுப்பானுக, இப்போ யாரு மறுபடி ஏத்துறது, ஒருத்தனும் சரி இல்ல” என்றான் வீரா, இது தேவாவுக்கான பதில். இப்போது பேசி வாதம் செய்ய விரும்பவில்லை. “சரி சரி மேல ஏத்து” என்று நகர்ந்தான் தேவா.

சேட்டுடன் சேர்ந்து கிச்சாவும் சமான்களை மீண்டும் லாரியில் ஏற்றினார்கள். மீண்டும் தார்பாய் கட்டப்பட்டது.

வண்டியை எடுக்கப் போகும்போது ஒரு பல்ஸரில் வந்த இளைஞன் லாரியை உரசுவாது போல வண்டியை நிறுத்தி இறங்க முயல “யோவ் வண்டிய எடுய்யா” என டிரைவர் சீட்டில் இருந்து எட்டிபார்த்துத் திட்டினான் வீரா.

அதைக் கண்டுகொள்ளாமல் தேவா அருகில் சென்று “போலாமாப்பா?” என்றான் வந்தவன்.

“கிச்சா என் பையன்” என அறிமுகம் செய்தான் தேவா.

“ஓஹோ, தம்பி நல்ல இருக்கீங்களா, என்ன படிக்கிறிங்க?

“காலேஜ் பர்ஸ்ட் இயர், நீங்க நல்லா இருக்கீங்களா?

“நல்லா இருக்கோம் தம்பி”

“சரி கிச்சா, நான் பையன்கூட வீடு வரைக்கும் போறேன். நீங்க வண்டிய அஞ்சு ரோட்டு வழியா விட்டுச் சுத்திட்டு வந்திடுங்க. மார்க்கெட் பக்கம் தோதா வண்டிய நிறுத்திட்டு, சாப்பிட்டுட்டு இருங்க அதுக்குள்ள நான் வந்திடுவேன்”

“சரிங்க”

பல்ஸர் கிளம்பியது. லாரியும் கிளம்பியது. கிச்சா கிளீனர் சீட்டில் அமர்ந்தான். “ஓனர் சொந்த ஊருல்ல, அதான் வந்த உடனே வீட்டுக்குப் போறப்ள”

“அதுக்கு?”

“பையன் நல்ல வளந்துட்டான்”

“லேய் மூடிட்டு உக்காரு, இல்ல பின்னாடி போ”

“எனக்கு மட்டும் புடிச்சா பேசறேன், வேற வழி இல்லாமதானே தம்மதுண்டு பையனுக்கெல்லாம் கூட கும்பிடு போடுறேன். நான் என்ன உன்ன மாதிரி டிரைவரா…. பேசி முடிக்கும் முன் “ஐயோ போலீஸ் நிக்கிறான் டா. டிராபிக் டைமு ஊருக்குள்ள வரதுக்கு எவ்ளோ புடுங்க போறானோ” எனச் சலித்துக்கொண்டே மெதுவாக ஓட்டினான். இவர்கள் லாரியை பார்த்ததும் மறித்து இடப்புறம் ஓரம் கட்டி நிறுத்தச் சொன்னார், ட்ராபிக் போலீஸ்.

இதற்குள் கிச்சா வண்டி பேப்பர்களை எடுத்து வீராவின் கைகளில் கொடுத்தான். வீரா இறங்கி போலீஸ் நோக்கி நடந்தான். கிச்சாவும் கொஞ்சம் தள்ளி நடந்தான்.

போலீஸ் பேப்பர்களை பார்த்தார்கள். “என்ன லோடு?”

“சிலை ஐட்டம் சார், திருவிழாக்குக் கடை போடக் கொண்டு வந்தோம்”

“எங்க இறக்கப் போறீங்க?”

“ஆத்து பக்கம் போனோங்க, அங்க போடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க, அதன் மார்க்கெட் பக்கம் போடலாம்ன்னு”

“கடை யாரு போடுறா?

“எங்க ஓனரோட மச்சான் சார்”

“இப்போ வண்டி சிட்டிக்குள்ள வரலாமா?

“இல்ல சார்….” வீரா தயங்கித் தயங்கிப் பேசினான். சில நிமிடங்களுக்குப் பின் போலீசிடம் பேரம் முடித்துவிட்டு லாரி நோக்கி நடந்தான் வீரா. நடக்கும்போதே பேப்பர்களை கிச்சவிடம் நீட்டினான். கிச்சா லாரியின் அந்தப்பக்கம் வந்து ஏறிக்கொண்டான். லாரி ஹேமலா ஹோட்டல் வழியே வந்து போலீஸ் ஸ்டேஷனை கடந்து மாநகராட்சி பள்ளிக்கு எதிரே இருந்த காலி இடத்தில் நின்றது.

கிச்சா, சேட்டு, வீரா மூவரும் நடந்து போய்ச் சாப்பிட்டுவிட்டு வந்தனர். அவர்கள் திரும்ப வந்தபோது தேவா லாரிக்கு அருகில் நின்றிருந்தான். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் மார்க்கெட் பிள்ளையார் கோவில் அருகே இருந்தது. கொஞ்சம் சிரமப்பட்டு வண்டியை மார்க்கெட் உள்ளே நுழைத்து, பிள்ளையார் கோவில் அருகே இருந்த இடத்தில் வண்டியை நிறுத்திச் சிலைகளை இறக்கினார்கள்.

மதியம் மூன்று மணிக்கு வேலையை முடித்தார்கள். லோடு இறக்கும்போதே கடையும் போடப்பட்டுச் சிலைகள் அடுக்கப்பட்டது.

வேலை முடித்து லாரியை எடுத்தான் வீரா. “கிச்சா, சேட்டு இங்கயே இருக்கட்டும். நீங்க பைபாஸ்ல வண்டிய போட்டுட்டு இருங்க. திண்டிவனம் லோடு நாளைக்குக் காலைல எத்திட்டுப் போய்டுங்க”

“அண்ணே, எங்க மாமா வீடு சேலத்துலதான் இருக்கு, நான் போய் இருந்துட்டு வெள்ளனை வந்துடுறேன்”

“அவருகிட்ட சொல்லிடு”

“சரிண்ணே, கொஞ்சம் காசு வேணும்”

“தேவா பணம் கொடுத்தான். “அண்ணே இன்னும் கொஞ்ச….”

“இப்போதைக்கு இவ்ளோதான் கிச்சா, நாளைக்கு வா பாத்துக்கலாம்” என நகர்ந்தார்.

லாரியில் ஏறி “போலாண்ணே” என்று சொல்லிவிட்டு அமர்ந்துக்கொண்டான்.

“லேய் கிராக்கி கிட்டதானே போற, அதுக்கு ஏன் மாமா வீடு, பெரியப்பா வீடுன்னு பொய் சொல்லுற? ஓஹோ அந்த மாமா வீடா” எனச் சிரித்தான்.

கிச்சாவின் முகம் மாறியது. “என்னண்ணே இப்படிச் சொல்லிட்டீங்க. நெஜமாவே எங்க மாமா வீடுதாண்ணே. பாவம் அவரு பொண்ண எனக்குக் கல்யாணம் பண்ணித் தரலாம்னு இருந்தாரு. அந்தப் புள்ள யாரையோ லவ் பண்ணி இருக்கு. கல்யாணத்த பத்திப் பேசவும் அவன்கூட ஓடிப் போய்டுச்சு. அந்த ..யோளி வயித்துல கொடுத்துட்டுப் புள்ளைய வீட்டுக்கு அனுப்பிட்டான். மாமா அதுலயே ஒடஞ்சு போயிட்டாப்ள. சரி இவ்ளோ தூரம் வந்துட்டோமேனு பாக்க போறேன்…. அண்ணே… அண்ணே ஒரு நிமிசம் ஓரம் கட்டு”

“ஏன் டா?”

“அந்தத் துணிக் கடைக்குப் போயிட்டு வரேன், ஒரே நிமிசம்”

“லேய், போலீஸ் வந்தா ..லு விடுவான்டா சீக்கிரம் வா”

அதற்குள் இறங்கி ஓடிவிட்டான். சில நிமிடங்களில் திரும்பி வந்து வண்டியில் ஏறினான். கையில் ஒரு கவர் இருந்தது “வண்டிய எடுண்ணே” என்றான்.

கொஞ்ச தூரம் நகர்ந்ததும், “அண்ணே இந்தா. இன்னிக்கு உனக்குப் பிறந்தநாள் நாள். அதுக்குத்தான் வாங்கினேன்” என அந்த கவரை நீட்டினான்.

“பொறந்தநாளா? உனக்கு யார்ரா சொன்னா?”

“நமக்கெல்லாம் யாருண்ணே சொல்லப் போறா, காலைல உன் லைசென்ஸ் எடுத்தேன்ல அப்போ பாத்தேன்”

“ஓஹோ, பொறந்தநாளு” என வெறுமையாய் சிரித்தான்.

“சட்டைய பாருண்ணே, புடிச்சு இருக்கான்னு” என்று கவரை வாங்கி உள்ளிருந்த சட்டையை எடுத்துக் காட்டினான். வீராவின் முகத்தைப் பார்த்தான்.

“எனக்கெதுக்குடா இதெல்லாம் ? நீ வச்சுக்கோ, உங்க மாமாவுக்குக் கொடு”

“புடிச்சு இருக்கா, இல்லையா?”

“பச்ச கலரு ஜிங்குச்சா” எனச் சிரித்தான் வீரா. கிச்சாவின் முகம் மாறியது. “கிருஷ்ணா சும்மா சொன்னேன் டா. சட்ட சூப்பரா இருக்கு.  எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில டா. சட்டென்று ஒரு விசும்பல் வந்தது வீராவிடமிருந்து. கடைசியா எங்க அப்பா எதுக்கோ எனக்குச் சட்ட வாங்கித் தந்த நியாபகம் டா. அதுக்கப்பறம் இப்போதான். பொண்டாட்டி புள்ளைன்னு இருந்திருந்தா தெரிஞ்சு இருக்கும். எனக்கு யாரு இருக்கா?” கண்கள் லேசாகக் கலங்கின. அடக்கிய அழுகை பெருமூச்சாய் மாற, “இத்தன நாளா உன்ன திட்டினதுக்கு என்ன அழ வச்சிட்டியேடா ..யோளி” என மெல்லமாய் அவன் தோளில் அடித்தான்.

“ஏண்ணே அழுவர விடுண்ணே. பொண்டாட்டி புள்ள இருக்கவன் மட்டும் சந்தோசமா… இருக்கானா? அண்ணே அப்டியே ஓரம் கட்டு. சேலம் பஸ் இங்க வரும். நான் இறங்கிக்கறேன்.

லாரி நின்றது. தன் பையை எடுத்துக்கொண்டு கிச்சா இறங்கிச் சில அடிகள் நடந்திருப்பான்.

“லேய்”

கிச்சா நின்று திரும்பிப் பார்த்தான்.

“பேக் உள்ள ஆயிரம் ரூவாய் இருக்கும். பாத்து வச்சிக்கோ”

“எதுக்குண்ணே? எப்போ வச்ச”

“அதான் அந்த ஆளுகிட்ட கேட்டுட்டு இருந்தியே. நீ சட்ட வாங்க போனப்போ வச்சேன்”

“ஏண்ணே” என்றான்.

“அட வச்சுக்க டா” என்றுவிட்டு “லேய் ஒரு நிமிசம்” வேகமாய் அந்தச் சட்டை கவரை எடுத்துப் பிரித்துச் சட்டையை அணிந்துக் கொண்டான். “எப்படிடா இருக்கு?

“ராஜா மாதிரி இருக்கண்ணே!”

வெட்கத்தை அடக்கிக்கொண்டு சிரித்து, “சரி டா போயிட்டு வா” என்றான்.

“அண்ணோவ் உண்மையா சொல்லனும்னா, இந்தப் பச்ச கலர் சட்டைல சர்க்கஸ் பப்பூன் மாதிரியே இருக்க” என்றான் நக்கலாய்.

“அட ..யோளி, ஓடிரு” எனச் சிரித்துக்கொண்டே அடிக்கக் கை ஓங்க, கிச்சாவும் ஓடினான்.

லாரி கிளம்பியது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button