இணைய இதழ் 125சிறுகதைகள்

கேசவர் – சாளை பஷீர்

சிறுகதை | வாசகசாலை

“மிசினா கத்திரியா?”

“கத்திரியே போடுங்கோ காக்கா”

கத்திரியின் இரு ஓரங்களிலும் ஓடிக்கோலோனை தெளித்துத் துடைத்த பின் வெட்டத் தொடங்கினார் மம்மியா பிள்ளை. காலை எட்டு மணிதான் என்றாலும் வெய்யிலுக்குள் அவ்வளவு பவர். ஃபேன் காற்றும் சுகப்படவில்லை.

சாரத்தின் மேல் விழுந்த  முடிக்கற்றைகளை உள்ளங்கையில் வைத்து விரல்களால் மெல்ல தட்டிப் பிரித்த பின் அவற்றை உற்றுப் பார்த்தான் அமான். கொஞ்சம் பழுப்பேறிய கறுப்புடன் வெண்முடிகள். கள்ளாப்பருந்தின் உதிர்ந்த முடிகளைப் போல.

”சின்ன வயசுல சுருள் சுருளா இரிந்திச்சி அப்போம் சாடய்க்கிதான் பிரவுன் கலர் மத்ததுலாம் தனிக்கறுப்புதான் பாக்குறவன்லாம் ஆப்பிரிக்காக்காரன்ட போல இக்குதேன்னு சொன்னான்வுலு.”

உச்சந்தலையின் மேடருகில் முதன் முதலாக  இரண்டு நரை முடிகள் வந்திருந்ததைப் போன வருடம் மம்மியப்பிள்ளைதான் எடுத்துக் காட்டினார். ”முடிய வெட்டீட்டு வெளிய  எறங்குனா தலைய்ல படுற மொதக்காத்து என்னமோ தலய்க்குள்ளேந்தே வர்ற மாதிரி… ரண்டு கொக்குகள்ட றக்க காத்து அளவுக்கு…  அவ்ளோ சொகம் குளிக்கும்போதும் தண்ணிட குளிர்ச்சி மூளக்குள்ள எறங்குன்டா பாத்துக்குற வேண்டிதான்.”

கடையிலிருந்த நிலை ஆடியைப் பார்த்துவிட்டுத் தலையைத் தடவியவன் பெருமூச்செறிந்தான். நடுங்கும் இரு விரல்களால் அவன் தோளைத் தொட்டவரின் மூச்சுக்காற்றில் பீடி நாற்றமடித்தது. கண்ணாடிகளினூடே குளம் போலப் பெருகியிருந்த விழிகளைச் சிமிட்டியவாறே சொன்னார், ”இப்போ நாலஞ்சு வயசுப் பிள்ளய்லுவலுக்கும்லோ வெள்ள முடி வருது கேட்டியா?” மரச்செக்கில் ஆட்டிய கொழுப்பு தேங்காயெண்ணையில் செம்பருத்திப் பூ விட்டு  வெய்யிலில் ஊற வைக்கும் பக்குவத்தைப்பற்றிய மம்மியாப்பிள்ளையின் விவரிப்பில் இப்போ இது நான்காவது வகை மூலிகை. ஒவ்வொரு சொல்லுக்கும் அமான், ’ம்’ கொட்டிக் கொண்டிருக்க மனமோ அவன் ஹஜ்ஜுக்குப் போன காலத்துக்குள் இறங்கியது.

மக்கத்து மலையாளி உணவகத்தில் குடும்பத்துடன் இறால் கறியும் குபுஸும் தின்று கொண்டிருந்த சமயம் அப்பிரச்சினை கிளம்பியது. எதிர் மேசையில் உண்டு கொண்டிருந்த சிலோன்காரர் எச்சில் கையை ஆட்டியவாறு,  ”சாப்பாட்டுல மசிர் கெடக்குது” எனக் கூவினார். சப்ளையர் அதை இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டவுடன் இன்னும் கூடுதல் ஓசையுடன் நிறுத்தித் தெளிவாகச் சொன்னார். அவ்வளவுதான். சமையல்கட்டு, கேஷ் கவுண்டர், சப்ளையில் உள்ளவர்களெல்லாம் ஓடி வந்து அவரை வளைந்தனர். அமான் தலையிட்டு மொழிச்சிக்கலை விளக்கியவுடன் “ஓஓஹ்…  ஒரோர் நாட்டினும் ஓரோர் பாஷா ரீதி” என சமாதானமடைந்தனர்.

“ஷேவ் பண்ணவா?” கிரீமைக் கையிலெடுத்தார் மம்மியா பிள்ளை. மறுத்தபடி  காசைக் கொடுத்துவிட்டு கடையிலிருந்து இறங்கினான்.

மக்கத்தில் நடந்த கதை மாமுனா லெப்பை ஹாஜியாருக்கும் தெரியும். அவரிடம்  அவன் சொன்னதற்கு காரணமிருந்தது. கல் வியாபாரத்திற்காக ஹாங்காங் போகும் முன்னர் அவர் சிலோன் மொனராகலையில் மயிலெண்ணைக்கடை வைத்திருந்தார். அவனுடைய மக்கத்துக் கதையைக் கேட்ட பிறகு அவரும் தன் சொந்த முடிக் கதையை எடுத்து விட்டார். ”இப்பவுள்ள பிள்ளய்லுவோ முள்ளம்பண்டியப்போல முடிகள வச்சுக்கிட்டு தொப்பியும் போடாம பள்ளிக்குள்ள வந்ததும்  காணாதுன்டு மொத ஸப்புலய்லோ நிக்கிறானுவோ” கைத்தடியைத் தலைக்கு மேல் உயர்த்தினார். சிறுவயதில் தலைமுடியை ஆசைப்பட்டு சேக் பாணியில் வெட்டியதற்காக வாப்பா தன்னிடம் மூன்று நாட்கள் பேசாமலிருந்ததைச் சொன்னார். முன் நெற்றி வரைக்கும் இருந்த மாமுனா லெப்பை ஹாஜியாரின் தலைமுடி ஓர் அசப்பில் உரித்தெடுக்க வசதியாக ஒட்டி வைக்கப்பட்டது போலவும் இருந்தது. வேர் கறுத்தும் நுனி வெளுத்துமிருக்க சாவட்டை வெளுப்பெல்லாம் ஒன்று கூட  இல்லை. ஸ்டீல் கம்பியின் பளபளக்கும் ஒரிஜினல் வெளுப்பு. சாய்வும் சரிவுமில்லை. நேர் விறைப்பு. மாஞ்சோலையின் புல்வெளிப் பரப்பு கணக்காக. தடவிப் பார்க்க ஆசைப்பட்டவன் அவரின் வயதை நினைத்து சும்மாயிருந்தான். ’சென்னை மண்ணடித் தெருவில் பேப்பர் கடை வைத்திருக்கும் சுகுமாருக்கும் அச்சு அசலா இதப்போலத்தான் முடி’ எனச் சொல்ல வாயெடுக்கும்போது ஹாஜியாரின் கண்களில் நீர் முட்டியிருப்பதைக் கவனித்தான். எதை நினைத்து அவர் கலங்குகிறார் என அவனுக்குப் பிடிபடவில்லை. தலைக்கு மேலே காக்கைகளின் கரைதல்கள் தீவிரமாகக் கேட்டன. மின்சாரக் கம்பியில் அமர்ந்திருந்த இரு காக்கைகள் அவ்வளவு விசையுடன் தரைக்கு இறங்கின. இரு வால்களையும் ஒட்டி விலக்கியபடி கரைதலோடு மேலெழுந்தன.

மனம் முடி முடியாகத் தாவத் தொடங்கியிருந்தது. எல்லாக் கதைகளும் சரங்கோர்த்தாற் போல ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழுகின்றன. மைசூரிலிருந்து நிலம்பூரில் இரண்டாம் திருமணம் செய்த மாப்பிள்ளையின் தலை முடிச்சாயம் கசிந்து வெளுக்கவும், ’இனி அந்நிய மாநில ஆண்களுக்கு இங்கு பெண்ணில்லை’ என ஊர் கூட்டத்தில் தீர்மானம் போட்டார்களாம்.

அதுவரைக்கும் இலேசாகவிருந்த மனத்தில் கனம் ஏறிக்கொண்டது. காலிலும் அவ்வளவு பாரம். நடக்க மனசில்லை. மொகுதூம் பள்ளி சங்கத்துக் குறட்டில் போய் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.

பழைய பேப்பர் இரும்புக்காரன், வெற்றிலைச் சாற்றை மைய்யித்துக்காடு சுவர் முக்கில் உமிழ்ந்து விட்டு போகும் தலைச்சுமை மீன்காரி, தோளில் பழைய சுருங்கிய சாரத்தை  மடித்துப் போட்டிருந்த வட இந்தியத் தொழிலாளிக் கூட்டத்திலிருந்த ஒருவன் தனக்கு முன்னே சென்று கொண்டிருந்த இன்னொருவனைக் கையைக் காட்டி ஏதோ  சொல்லவும் அவன் இவனை திரும்பிப் பார்த்துக் காறி உமிழ்ந்தபடி, “சுப்ரே” என்றான். ‘ரக் ரக்‘ என  பெடல் ஓசையுடன் கடந்து போன சைக்கிளுக்குப் பின்னால்தான் அந்த சின்னப்பையன் தென்பட்டான். அரையடி நீட்பமுள்ள குத்து  வெளக்கு சாட. தோளில் துணிப்பை. காக்கா வீட்டு பேரனின் திட்டம். நிறம் மட்டும் சற்று மங்கல். மூணு மூணரையடி உயரமிருக்கும். மக்தபுக்கு போகிறான் போல.  சிறுவனின் வட்ட வெள்ளைத் தொப்பியையும் அதற்குள்ளிருந்து புல்லைப் போல நீட்டிக் கொண்டிருந்த தலைமுடிக் கீற்றுகளையும் கண்டவுடன் உற்சாகமானான். “பிள்ள எந்த பள்ளியிலமா ஓதுறா?” அவன் நின்று பதில் சொல்லுவான் என எதிர்பார்த்தான். எதையோ முணுமுணுத்த  சிறுவனும் நிற்கவில்லை. ஏமாற்றம். பைக்கின் படபடப்பு. படகு இஞ்சினை அதில் ஏற்றிக்கொண்டு போன கொம்புத்துறை சாச்சாவின் பிடரி கண்ணில் பட்டது. ஸ்பெயினின் கால்ஸ் புயாலுக்குள்ளது போன்ற நீள முடிக்குள் நரை விரவியிருந்தது. ஆனால் அது தோள் வரை பரவி இடமும் வலமுமாகஅலையடித்தது. ”யுஎஸ்சி மேச்சுல ஆடுன தூத்தூர்க்காரன் ஓடும்போதுலாம் அவன்ட பெரடி முடி மட்டும் விடாம  புறாட வாலப்போல துள்ளி துள்ளியடிச்சுது…. அவனுக்கு பாலே பாஸ் பண்ண தெரியாட்டி கூட அவன்ட கொண்ட ஒன்னே போதும்லே. காலரியிலிருந்து கேட்ட சத்தத்துல லைன்ஸ்மேனே கையிலிருந்த சிவப்பு மஞ்சள் கட்டம் போட்ட கொடியால வாயப்பொத்திக்கிட்டு சிரிச்சார்.”

சூஃபிப் பாடகர் கன்ஸிக்கும் இத மாதிரித்தான் முடி.  ஆனால் அது நல்ல கறுத்த பாம்பைப் போல. அவர் போடுவது போல தன் தலைமுடிக்கெல்லாம் கூட்டாளி நஜீம் குமைந்தானோ மருதாணியோ போடாவிட்டாலும் கூட நஜீமும் சூஃபி நூல்களை வெளியிடுபவர்தான். ஒருநாளைக்குப் பத்து மணி நேரம் வாசித்துத் தேறும் உலகளாவியப் புத்தகங்களில் மூன்றிலொரு பங்கை இதுவரை வெளியிட்டிருப்பதால்தான் அவரது பதிப்பகம் தொடங்கிய ஒன்றரை வருடங்களிலேயே கீர்த்தி கியாதியின் உச்சம் தொட்டது எனப் பதிப்புலகில் பேச்சு.

பாட்ஸ்டாம் பல்கலைக்கழகத்தில் அரசியல் மானிடவியலுடன் உளப்பகுப்பாய்விலும் ஆய்வு செய்யும் ஆஷிர் வழியாகத்தான் அமானுக்கு நஜீம் பழக்கம். நஜீமின் உஸ்தாத் ஒரு பாரசீக அறிஞர். அவருக்கும் தோள் வரையிலும் கிடக்கும் முடிதான். நஜீமும் அப்படி முடி வைத்த பிறகே தனது பதிப்பகத்தின் முதல் நூலை வெளியிட முடிந்ததாம் என்பதை ஒரு கமுக்கத்தைப் போல அவன் பகிர்ந்தது ரொம்பப் பிடித்திருந்தது. ஆஷிருக்கு இங்கதான் ஈசியார்ல மச்சிலிபட்ணமோ மல்லிபட்ணமோ ஏதோ ஒரு ஊரு. சாம்பல் முத்திங்களிதழில் அவனுடைய அரசியல் கோட்பாட்டு எழுத்தை அவ்வளவு எளிதாகவெல்லாம் வாசித்துக் கடக்கவியலாது. சமகாலத் தமிழ் இலக்கியத்தில் உறையும் அரசியல் மனம்தான் அவனுடைய ஆய்வு சப்ஜெக்டு. ஏர்போர்ட் போவதற்காக சென்னை வந்தவனை தனியாப் போற மாதிரியே தனியாத்தான் திரும்பி வரணும் என ‘வாழ்’த்தி வழியனுப்பினான் அமான். பாய் புரியுது பக்கத்து இலய்க்கு பாயாசம் போடுங்கற கததான் என்ற ஆஷிரின் சொல்லை தனக்குள் ஒரு தடவை சொல்லிப் பார்த்தான். எல்லா நாளங்களிலும் குளிர் சுழித்தோடியது. நியூயார்க் போய் சேர்ந்ததற்கு வாட்சப்பில் மெசேஜ் அனுப்பியிருந்தவனின் புரொஃபைல் படத்தில், “தனியனாகவே வந்தோம் தனியாகவே மீள்வோம்” என்ற சொல் பல மாதங்களாக இருந்து வந்தது. ”பய எதச்சொன்னாலும் அத ஒரு தத்துவமாலோ மாத்தீடுறான்”.

நேரங்கிடைக்கும்போதெல்லாம் ஆஷிரின் வாட்சப் புரொஃபைலைப் பார்ப்பது அமானுக்கு புதிய வழமையாகியிருந்தது. அழுகையைக் கட்டுப்படுத்தவியலாது என்பதால் இரவில் மட்டும் அவற்றைப் பார்ப்பதைத் தவிர்த்தான். ஒருநாள் பின் மதியப்பொழுதில் ஆஷிரின் புரொஃபைலில் புதிய படமொன்றிருந்தது. கைகளால் தொட்டுத் தொட்டு அதைப் பெரிதாக்கிப் பார்த்தான். யாரோ விசிறியடித்ததைப்போல எல்லாப்பக்கமும் ஒரே சிவப்புமயம். காட்டு செண்பகப்பூ மொத்தமாகப் பூத்திருக்கும் ஒரு தோட்டத்தில் எடுத்திருப்பான் போல. தீக்கு நடுவே பச்சத்தண்டு மொளச்சு நிக்கிறா மாதிரி அப்படியொரு நிப்பு. மலர்களுக்கு நடுவே மால்குடி டேஸில் வரும் பையன் சுவாமியுடையது போன்ற கறுத்த கோட்டணிந்திருந்தான். உள்ளே அணிந்திருந்த வெள்ளை சட்டையின் பொத்தானை ஏறுக்கு மாறாக மாட்டியிருந்தவனின் தலையிலிருந்து ஏதோ சரம் சரமாகத் தொங்கியது கறுப்புக் கலரில். ’ரிப்பனா அது… இல்லல்ல.. ச்ச… அப்டிலாம் போடுற அளவுக்கும் இவன் மதி மயங்குனவனும் இல்லியே….’ உற்றுப் பார்த்தான். அவனது தலை முடிதான் நீளம் நீளமாக… நாலஞ்சு சேமியாக்குச்சிய உருட்டி வச்ச மாதிரி…

உன் புரொஃபைல் படம் அருமை. எதற்குள்ளும் சிறைப்படாத நிலவைப் போலவும் வசந்தத்திலிருந்து முதுவேனிலுக்குள் எட்டிப்பார்ப்பது போலவுமிருக்கிறது என்ற அமானின் தகவலின் கீழ் கண்ணீர் இமோஜி போட்டிருந்தான் ஆஷிர். நீளமான முடிகளைப் பராமரிப்பது குறித்த சித்த, ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகளை அவனுக்குத் தொடர்ந்து அனுப்பி வைத்தான். அவன் கேட்டுக் கொண்டதின் பேரில் சில மருந்துகளையும் இங்கிருந்து வாங்கியனுப்பினான். கால் மாக்சும் ரபீந்திரநாத் தாகூரும் தாடியுடன் தலைமுடியையும் நீளமாகத்தான் விட்டிருந்தார்கள். பெரிய முடி வைத்திருப்பவர்கள் எல்லாம் சிந்தனையாளர்கள் இல்லைதான். ஆனால் சிந்தனையாளர்கள், உலகைப் புரட்டியவர்களின் பட்டியலில் பலரும் நீள முடிக்காரர்கள்தான். எனவே  நிற்றலியல் நீட்டலியல் என ஏதாவது புதுப்புதுக் கோட்பாடுகளை உருவாக்கேன் என சொன்னதற்கு ஆஷிர் சிரித்தது இன்னமும் காதில் நிற்கிறது. அவன் ஒரே தொடர்ச்சியாகத்தான் சிரித்தான் என்றாலும் அதற்குள் நீர் மேல் மிதக்கும் இரப்பர் துண்டங்களைப் போல  பல இடைநிறுத்தங்களிலிருந்தன. சோவியக் குலுக்கிப் போட்ட மாதிரியான சிரிப்புத் துண்டங்கள். அவனிடம் அப்படி கேட்டிருக்கக் கூடாதுதான். நம்ம அறியாமையை நாமளே விரியத்தொறந்து இதா இந்தாப் பாத்துக்கோன்டு சொன்ன மாதிரி.

இடவெளி. உருவகங்கள் என்பது மெய்மையை மர்மமாக்குவதா? அல்லது உருவகங்களின் வழி மெய்மை மின்னல் வெட்டு போன்று ஒரு கணத்தில் தோன்றி மறைகிறதா? இது போன்ற ஏராளமான வரிகளை ஆஷிரின் எழுத்துகளிலிருந்து மேற்கோள் காட்டவியலும். வாளின் நுனியில் அமர்ந்திருக்கும் கூர்மைக்கு நிகர்த்ததுதான் அவனின் சொல்லும் எழுத்தும் என்பதை நிரூபிக்க ஆஷிரின் மேற்கோள்களை நண்பர்களிடம் வாசித்துக் காட்டினான். சொல்லைத் தவிர தான் இன்னொன்றுக்கு அடிமையில்லை என்பதற்கு ஆஷிருக்கும் தனக்குமான உறவே சாட்சி என பெருமைப்பட்டுக் கொண்டான். தனியே வண்ணப் பிரிண்ட் போட்டு எடுத்து வைத்திருந்த அவனது புரொஃபைல் படத்திலுள்ள நீள முடியைக்காட்டி இப்புடி சின்ன வயசுல முடிய தொங்க உடுறதுக்கு துணிச்சல் மட்டும் இருந்தா காணாது என்றவன் தன் தலையில் ஆட்காட்டி விரலை வைத்தபடி உள்ளயும் கொஞ்சம் வேணும் என்றான்.

கொம்புத்துறை சாச்சா, கால்ஸ் புயால்,தூத்தூர்காரன், கன்ஸி,நஜீம்,ஆஷிர் என்ற பட்டியலில் இறுதியாக அஷிரின் முடி நீளத்தில் போய் அவனது தீர்மானம் முட்டி நின்றது. நேச்சுரல் டை அடிச்சா தொழுவய பாதிக்காதுதான். ஆனால் சென்னை திரைப்பட விழாவில் பார்த்த அந்த படத்துக்குப் பிறகு எல்லாவகையான தலைச்சாயம் மீது அவனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தது. காட்சி  இதுதான். கட்டிளம் பையனை கவர்வதற்காக தன் தலைமுடிக்கு சாயமடித்துச் சென்ற எழுத்தாளனின் கன்னக்கிருதாவில் மை கோடிட்டு வழிந்திறங்குவது… படைப்பு மனத்தின் நூதன ஓட்டங்களுக்குப்பின்னால் விசுவாசமிக்க நாய்க்குட்டியைப்போல பின் தொடர்ந்து  வந்த கதை இப்படியொரு காட்சியில் முடிந்ததை அவனால் இன்று வரை செரிக்கவே முடியவில்லை. இஞ்சி வாட்டம் மஞ்சளில் கோட்டுக்கு பக்கத்தில் இன்னொரு கோட்ட பெரிசாப்போடு  அவ்வளவுதான்டா விஷயம் சரி ரொம்பக்கொழம்பி மீன் பிடிச்சி இரிக்கிற முடிய தொலய்க்காதே  முடிய வள நரய மற. இந்த முடிவிற்கு வந்த பிறகு முடிந்து கொண்டை போட்டவன், வாரி நடுத்தலையில் கிளிப் போட்டவன், கிளிப்பில்லாமல் தேங்காய் எண்ணையோ கிரீமோ தேய்த்து படிய வைத்தவன்,பரத்தி அப்படியே விட்டவன், ஊத்துக்குளி புத்துருக்கு பசு நெய்யில் எண்ணி நான்கு துளிகளை கூந்தலுக்குக் காட்டுபவன்  என வகை வகையான பிடரி முடியர்களை தேடித் தேடி பார்க்கத்தொடங்கி எதிலும் நிலை கொள்ளாமல் அதுவும் ஆஷிரின் விட்டு விடுதலையாகும் கட்டற்ற குழல் முடி பாணியில்தான் வந்து முடிந்தது.

”இருக்கவே இருக்கிறாரு ஆஸ்தான வித்துவான் மம்மியாப்புள்ள. படத்தக் காட்டுனாப் போதுமே. மிச்சத்த அவர் பாத்துக்குருவாரு”. முடி வளர்ந்த பிறகு இவன் இப்புடித்தான் என்டு ஆவீரும் வளர்ர வரய்க்கும் ஆக்கள் கேட்டுத் தொலய்க்கிற  கேள்விகளுக்கு மட்டும்  கோவப்படாம பதில சொன்னாப் போதுமே இப்பிடி செஞ்சு பாத்தா என்ன என் முடி என் உரிமைங்குறத ஒரு தாள்ல எழுதி வச்சுக்கிட்டு கேக்கிரவன் மொகத்துக்கு நேரா கத்தியப் போல நீட்டுனா இனிமே ஒருத்தனும் ஒரு பயலும் கேக்க மாட்டான். விரித்துப் போட்ட முடியுடன் தலையைச் சுழற்றுகிற மாதிரி ஆஷிரிடம் வீடியோ எடுத்து அனுப்பச் சொல்ல வேண்டும். யூ டியூபுல ஆயிரம் வீடியோ இருக்கலாம். ஆனா இவன் சுத்துறதுக்கு  கிட்ட அதுலாம் நிக்க ஏலாது. இந்த சின்ன வயசுல பஞ்சம் பண்டாரத்தப் போல முடிய வளக்குறதுக்கு தனியா புத்தியும் மனசும் வேணுமே. இளமைக்கு மேல் வலிய இழுத்து விட்டுக் கொண்ட முதுமை வேடம் இல்லை கறுந்திரை என்பதுதான் சரி. ஞானமும் துணிச்சலும் சேர்ந்தா அது இன்னொன்னாவுல ஆயிருது….

நவரத்னா ஆயுர்வேத ஹேர் ஆயிலுக்கும் ஆஷிர் பரிந்துரைத்த ஃபிரெஞ்சு மெய்யியலாளரும் சமூகவியலாளர்களுமான ஜில்பேஹ் சிமோண்டோ, ஈமீல் டூஹ்கெம் ஆகியோரின்  இரு புத்தகங்களுக்கும் ஒன்றாகத்தான் அமான் இணைய வழியாக ஆர்டர் போட்டான். நவரத்னா எண்ணை வந்த அய்ந்தாம் நாளில் இரு புத்தகங்களும் வந்து சேர்ந்தன. பிடரிப்பக்கம் முடியின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்காக மம்மியாப்பிள்ளைக் கடைக்கு போகத் தொடங்கிய மூன்றாவது நாளில் அவரின் பார்வையைப் புரிந்துகொண்டு  தனது அறையிலேயே எதிரும் புதிருமாக இரு ஆடிகளைப் பொருத்தினான். செம்பவளத்தை உருக்கினாற் போலிருந்த நவரத்னா எண்ணெய்யைத் தலைக்குத் தேய்த்த பிறகே புத்தகங்களை வாசிப்பது என்ற தீர்மானத்தின்படி செயல்பட்டான். என்ன எழவு கற்பூர வாட  ஒரே வடக்கு நாத்தம் என முணுமுணுத்த அமானின் மனைவி உணவுத்தட்டை அறையின் வாசலிலேயே  வைத்து விட்டு செல்லத் தொடங்கினாள். புத்தகத்தைப் பிரித்துப் படிக்கத்தொடங்கியவன் கொஞ்ச நேரத்திலேயே கண் கிறங்கிப் போனான். நவரத்னா எண்ணய்க்கு அப்டி ஒரு தூக்க இழுப்பு. பகலிலும் கனவுகள் வந்தன. இரண்டு நாட்களும் புத்தகத்தைப் படிக்க முடியாத குற்றவுணர்வில் எண்ணெய் குப்பியைக் கட்டிலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். மூன்றாம் நாள் தடுமலும் தலைபாரத்துடனும்தான் புத்தகத்தை எடுக்க முடிந்தது. எழுத்துக்கள் இரண்டிரண்டாகத் தெரிந்தன. சில எழுத்துக்கள் திரண்டுக் கொண்டு கசத் துணுக்குகள் போலிருந்தன. புத்தக வாசிப்பிற்கு ஒருநாளும் எண்ணெய் தேய்ப்பிற்கு இன்னொரு நாளுமாகப் பிரித்துக் கொண்டான்.

ஷெய்ஹ் ஹூசைன் பள்ளியிலிருந்து அஸர் பாங்கு ஒலிக்கும்போது சாய்வு நாற்காலியிலிருந்து  சடவு முறித்தான். இறக்கையொடிந்த பறவை போல இடுக்கில் மாட்டிக்கொண்டு புத்தகம் தொங்கியது. எடுத்து நேராக வைத்தான். அஸ்ஸலாத்து ஹைய்ரும் மினன்னவ்ம் என்பதை  மோதினார் கூடுதலாகச் சொன்னார். கொரல் நல்லாருகிதிண்டு பீஹார்லேந்து ஆளை வருத்துனாங்க. இடக்கிடக்கி இப்பிடித்தான் பாங்கு சொல்லும்போது எதயாவது மறந்துடுறார்ன்டு அவர் மேல ஜமாத்துல கம்ப்ளைண்டு. “The individual is to be known as a relative reality, a certain phase of being that supposes a pre-individual reality as its center, and that, even after individuation, does not completely disappear.” என்ற ஜில்மேஹின் நூல் வரிகளில்  ஒரு தனியிருப்பு என்பது ஒரு சார்பு நிலையிலான யதார்த்தமாகும் என்பது வரை அவனுக்குப் புரிந்தது. மீதியை மொழியாக்குவதற்குள் முதலில் புரிந்தது மறந்து விட்டிருந்தது. தாளெடுத்து அதில் எழுதினான். நானூத்தி சொச்சம் பக்கமுள்ள  புக்கயும் இப்புடித் தாள்ல எழுதித்தான் வாசிக்கனும்டா அது இன்னிக்கு முடியிற காரியமா. சோர்வாக இருந்தது. நமக்கெதுக்கு ஆவாத வேல….  ஒரு பத்திக்கே இப்புடி அசந்தா எப்புடி அவன்ட்டயே  கேப்போம். செல்லைத் திறந்தான்.  ஆஷிரின் வாட்சப்பில் அந்த சிவப்பு நிறப் படமில்லை. படத்தை மாற்றியிருக்கிறான். ஒன்றரை வயது மகளை கையில் ஏந்தினாற்போல படம். அவனை மாதிரியே மங்கோலிய சாடை. ஏதோ ஒன்று குறைவது மாதிரி. அவன் தலையில் அந்த நீள நீளமான சேமியாக்குழல் முடிகளில்லை. அவனா இல்ல அவன் அண்ணந்தம்பி யாருமா? கண்களைக் கசக்கினான். செல்பேசி திரையின் வெளிச்ச அளவைக்கூட்டினான். கண் கூசியது. போனின் ரீஸ்டார்ட் பொத்தானை அழுத்தி விட்டு முகங்கழுவி வந்தான். அது வேற யார்லாமில்ல. முடியை வெட்டி விட்டான் போல. வாட்சப்பில் மெசேஜ் வைத்தான். மதியம் இரண்டரை மணி வாக்கில்தான் அமான் அனுப்பிய செய்திகளுக்கு பதிலனுப்பியிருந்தான்.

“பாய், கோவிச்சுக்காதீங்க. அத்தாவுக்கு உடம்பு சரியில்லாததுனால அவசரமா  புறப்பட்டு ஊருக்கு  வந்துட்டேன். அதுனாலத்தான் தகவல் சொல்ல முடியல “

“ஆமா பாய் முடிய வெட்டீட்டேன். யுஎஸ்ஸுல முடி வெட்ட முப்பதுலேந்து அம்பது டாலர் வரைக்கும் குடுத்தாவணும்.  நம்மூர் கணக்குல பாத்தாக்கா…. மூவாயிரத்திலேந்து அய்யாயிரம் ரூவா ஆவுது…. அதுனாலத்தான் ஊர் வாற வரைக்கும் வெட்டாம வச்சிருந்தேன்.”

*

.

சொல்முதலி

ஹஜ் — முஸ்லிமின் வாழ்நாள் அய்ங்கடமைகளில் இறுதிக்கடமை. மக்காவிற்கு புனிதப்பயணம் செல்லுதல்

குபுஸ் — வெண்கோதுமை ரொட்டி

ஸஃப் —  அணி வரிசை

அஸர் பாங்கு —  மாலை வேளைத்தொழுகையழைப்பு

அஸ்ஸலாத்து ஹைய்ரும் மினன்னவ்ம் —  உறக்கத்தை விட தொழுகை மேலானது – வைகறைத் தொழுகை அழைப்பில் மட்டும் இடம் பெறும் சொல்.

barif1968@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button