இணைய இதழ் 126கட்டுரைகள்நூல் விமர்சனம்

ஜனநாயகன் பிம்பச்சிறை 2.0 – ர. முகமது இல்யாஸ் ; நூல் அறிமுகம்: பீட்டர் துரைராஜ்

கட்டுரை | வாசகசாலை

நடிகர் விஜய், அரசியல்வாதியாகி இருக்கிறார். தமிழ்நாட்டில்  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற திரைநட்சத்திரங்கள் முதலமைச்சர்களாக அதிகாரத்திற்கு வந்துள்ளனர். விஜயும் முதலமைச்சர் ஆசையில்  இருக்கிறார். கரூரில், கடந்த செப்டம்பரில் ஏழு குழந்தைகள் உட்பட 41  பேர், அவரைக் காண வந்த நெரிசலில் மரித்துப் போனார்கள். விஜயைச் சுற்றி எத்தகைய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது, அதன் அரசியல் என்ன என்று இந்த நூலில் விவாதிக்கிறார் திரை ஆய்வாளரான ர. முகமது இல்யாஸ். 

விகடனில் பத்திரிகையாளராக இருந்த ர.முகமது இல்யாஸ் ஓர் ஆய்வு மாணவர். பெயரை மாற்றி கட்டுரை எழுத மறுத்து குரல் எழுப்பியவர். அவர் எழுதிய ‘ஜனநாயகன் பிம்பச்சிறை 2.0’ என்ற  நூல் புத்தகக் கண்காட்சியின் போது வெளிவந்துள்ளது. உடனே வாசித்தும் விட்டேன். சுவாரசியமாக உள்ளது. உணர்ச்சி கடந்து, அறிவுத்தளத்தில்  விவாதிக்க வேண்டிய பல புள்ளிகளை இந்த நூல் காட்டுகிறது. 

மறைந்த ஆய்வாளரான எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ‘ பிம்பச்சிறை எம்.ஜி.ஆர். திரையிலும், அரசியலிலும்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். அதன் தாக்கத்தில், இந்த நூலுக்கான  பெயர் வைக்கப்பட்டுள்ளது. திரை நட்சத்திரங்களோடு, தொடர்புள்ள பல சம்பவங்களுக்குத் தத்துவ விளக்கம் கொடுக்கிறார் இல்யாஸ். நமக்கு வரும் செய்திகளை ஒரு குடிமகனாக எப்படிப் பார்க்க வேண்டும் என்று குறிப்புகளைத் தருகிறார். புகழ்பெற்ற ஒருவரின் நடவடிக்கைகளில் மறைபொருளாக இருக்கும் செய்திகளை நமது கவனத்திற்குக் கொண்டுவருகிறார். விஜய் நடித்த படங்கள், ரஜினி, அமிதாப், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற நட்சத்திரங்கள் ஊடாக தன்னுடைய வாதங்களை நம் முன்  வைக்கிறார். 

இந்த நூல் விஜயை நடிகராகவும் அரசியல்வாதியாகவும் ஊடகப் பிரதியாகவும் அணுகுகிறது.  ‘எம்ஜி.ஆரின் ஆட்சிக்காலம் ஓர் இருண்டகாலம்’ என்பதை நினைவுபடுத்தும் இந்த நூல், விஜயிடமும் இத்தகைய கூறுகள் உள்ளன என்று  சொல்லுகிறது. ‘விஜயிடம் எந்த விவகாரம் குறித்தும் தெளிவாக வெளிப்படாத நிலைப்பாடுகளின் வழியாக, தொண்டர்கள் அவர்மீதான கற்பனையைத் தங்கள் உணர்ச்சியின் வழியாக தாங்களே கட்டமைத்துக்கொள்கின்றனர்’, என்கிறார்.

‘குடிமக்களின் இறையாண்மை மக்களின் கனவாகவே இருந்துவிட்ட நிலையில், மொழி, அடையாளம், அதிகாரம் முதலானவற்றின் ஊடாக தென்னிந்தியாவில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், அதில் வெற்றிபெறுவதும் இயல்பானது’ என்று திரை ஆய்வாளர் மாதவ பிரசாத் சொல்வதைச் சுட்டிக்காட்டுகிறார்.  நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த விஜயை, சென்னை வரவழைத்து 24 மணிநேரம் வருமானவரித்துறை விசாரணை நடத்தியபிறகு, அவர் வெளியிட்ட செல்ஃபி அந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகமாகப் பகிரப்பட்ட படமாகும். எனவே விஜயைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. 

ஊழலை எதிர்ப்பதைத் தவிர அரசியல் நிலைப்பாடுகள் என்று ஒன்றில்லை என்பதை ரஜினியின் திரைப்படங்கள் முன்வைத்தன. வெகுமக்களிடம் ரஜினியின் இந்து தேசிய ஆதரவு செல்லுபடியாகவில்லை. திராவிட அரசியலை ‘அம்மா’ என்ற உருவகத்தால் நீர்த்துப்போகச் செய்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரும் அவரைப்பற்றி வெகுமக்களிடம் உருவாகியுள்ள ‘அனுதாபமான’  பிம்பத்தை விமர்சனம் செய்யாமல் திமுக இருக்கிறது என்கிறார் இல்யாஸ். 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினி போன்றோர் பயணித்தவாறே விஜயின் பயணமும் உள்ளது என்கிறார் ஆசிரியர். விஜயின் பிம்பம் கட்டமைக்கப்பட்ட ஒன்று. ‘பாதுகாவலன், சகோதரன், தலைவன்’  முதலான பிம்பங்கள் ஒரே நாளில் உருவானவை அல்ல. இந்திப்படங்களில் கோபக்கார இளைஞனாக ‘விஜய்’  என்ற பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். இந்தப் பெயரையே,  அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் அவருக்குச்  சூட்டியிருக்கக்கூடும். நடிகர் விஜயகாந்தின் படங்களில் அவரது தம்பியாக, சிறுவயது விஜயகாந்தாக நடித்தார். ஊடகங்கள் செய்தியைத் தருவதைத் தாண்டி, அவற்றை உருவாக்கவும் செய்கின்றன.டேனியல் டயான் சொல்லும் News Event  என்பதை, கரூர் சம்பவங்களைக் கொண்டு விவரிக்கிறார். 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு விஜய் பொதுவெளியில் தலைகாட்டுவதைக் குறைத்துக்கொண்டார். டிஜிட்டல்  வெளியில் இருந்து விலக்கிக் கொண்டார். அவரைப் பார்க்க வேண்டும் என்றால்  அவருடைய திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.

இல்யாஸ் விஜயை, அனுதாபத்தோடு பார்க்கிறார். ‘தமிழ்ச் சமூகத்தின் கடந்த காலப் பெருமிதம், சமகால நெருக்கடி, எதிர்காலக் கனவு, பதற்றம் முதலானவற்றை வெளிப்படுத்தும் தொன்மமாக விஜய் இயங்குகிறார்’ என்கிறார் ஆசிரியர். ‘வெகுமக்களின் அன்றாடப் பிரச்சனைகளைப் பொறுப்போடு உரையாடத் தொடங்க வேண்டும். தானம் செய்வது அரசியல் செயல்பாடு அல்ல என்பதைத் தொண்டர்களுக்கு உணர்த்த வேண்டும்’ என்கிறார்.

இந்த நூலை ‘சீர்மைப் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. 180 பக்கம். விலை ரூ. 240. ஆழமான அணிந்துரையும் உள்ளது. (சமீபத்திய திருப்பரங்குன்றம்  விஷயத்தில்கூட அவர் கருத்து சொல்லவில்லை). உதயநிதி ஸ்டாலினும் விஜயும் ‘பெரியாரின் பேரனாக’ பேசப்படுவது கண்டு மகிழ்கிறார் ஆசிரியர். இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்கிறார். இளைஞர்களையும் குடும்ப ரசிகர்களையும் ஒருங்கிணைத்த விஜயின் படங்கள், கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, மதுர போன்ற படங்களின் மூலம் கிராமங்களையும் நகரங்களையும்  ஒருசேர ஈர்க்கும் கதைக்களங்களைக் கொண்டவை. நவதாராளவாத உலகத்தின் இளைஞனாக வலம் வரும் விஜய் காதல், பெண்கள், கற்பு என்ற முதலான பழமைவாத சிந்தனைகள் மூலமாக முரண்பட்ட நாயகனாகவும் உள்ளார். அவருடைய திரைப்படங்கள் அவரை கலகக்காரனாகவோ, சமூகப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வையோ முன்வைக்கவில்லை. 

இந்த நிலையில் திராவிட அரசியலும் இந்த நூலில் விமர்சிக்கப்படுகிறது. உதயநிதி, ஆ.ராசா, பொன்முடி ஆகியோர்மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்கொள்ளும் செயற்திட்டம் இன்றைய திமுகவில் இல்லை. இசுலாமியச் சமூகத்தினருக்கும் அந்தக் கட்சிக்கும் இடையிலான பாலமாக திமுகவில் இன்று யாரும் இல்லை. இசுலாமிய வெறுப்பை வைத்து அரசியல் செய்யும் இந்தச் சூழலில் தவெகவிற்கும் திமுகவிற்கும் இடையில் உள்ள முரண்களை நட்பு முரண்களாகக் கருத வேண்டும் என்கிறார். 

வெகுமக்களின் வேலை  வாக்கு அளிப்பதோடு முடிவடைந்து விடுவதில்லை. சாதி ஒழிப்புக்கும் பதிலாகச் சாதி மேலாண்மை, நாயக வழிபாடு போன்றவை குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்கிறார்.

ர.முகமது இல்யாஸ், ‘இந்துத் தேசியம் இந்தியச் சினிமா’ என்ற காத்திரமான நூலை எழுதியவர். Read between lines என்ற இணையத்தையும் நடத்தி வருகிறார். நூலின் முதல் பக்கத்தில் மேற்கோளாக உள்ள, அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் பேசிய வசனத்தோடு,  இதனை முடிக்கத் தோன்றுகிறது. “அரசியலில் நாயக வழிபாடும் பக்தியும் நிச்சயமாகச் சீரழிவுக்கான பாதையாகவும், தொடர்ந்து சர்வாதிகாரத்திற்கான பாதையாகவும் இருக்கின்றன”

பிகு: விஜயின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய தஞ்சாவூர் விக்னேஷ், உயிருக்குப் போராடி மரணமடைந்த நாளன்று எழுதியது. 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button