இணைய இதழ் 127சிறுகதைகள்

சாமியாட்டம் – அபிதா

சிறுகதைகள் | வாசகசாலை

கருங்கும்மென்று ஒரே இருட்டு. அந்தச் சின்னக் கிராமத்தில் முப்பதிலிருந்து ஐம்பது வீடுகள்தான் இருக்கும். ஊருக்கு நடுவில் ஒரு மரத்தடியில் ஓலப்பெட்டி, அரிவாள், ஓலை, விறகு, சில மளிகை மற்றும் பூஜைப் பொருட்கள் என எல்லாவற்றையும் வட்டமாக வைத்து, அதைச் சுற்றி அந்த ஊர் மக்களெல்லாம் நிற்கிறார்கள். அப்போது திடீரென்று ஒரு சத்தம்.

“அம்மா, ஏம்மா எல்லாரும் பேய் மாதிரி அலறுறாங்க?” என்றது ஒரு பாப்பா.

“இது குலவைச் சத்தம் பாப்பா. எல்லாரும் குலவைப் போட்டு இந்தப் பொருள் எல்லாம் எடுத்துட்டு நம்ம சாமிய பார்க்கக் கிளம்பப் போறோம். அங்க போய் பொங்கல் வச்சு இந்த இரவு முழுக்க சாமி கும்பிடப் போறோம்” என்றாள் அம்மா.

ஒருவழியாகக் குலவைச் சத்தம் அடங்க, எல்லாரும் வயல்காட்டை நோக்கிப் புறப்பட்டார்கள்.  இரண்டு கிலோமீட்டர் இருக்கும். நடக்கிறார்கள், நடக்கிறார்கள், நடந்துகொண்டே இருக்கிறார்கள்.

“ஐயோ, அம்மா காலுல முள்ளு குத்துது. ஏம்மா என்னோட செப்பல எடுத்துட்டு வரல?”  

“கோவிலுக்குப் போகும்போது செருப்பெல்லாம் போடக்கூடாது பாப்பா. இது நம்ம முன்னோர்களுடைய குலதெய்வம். பத்து வருஷத்துக்கு ஒருமுறைதான் நாம இங்க சாமி கும்பிட வருவோம். இதுதான் உனக்கு முதல்முறை இல்லையா… அதான் அப்படி இருக்கு. அட்ஜஸ் பண்ணிக்கோ. அடுத்து உன் பிள்ளைகளுக்கும் நீ இதையெல்லாம் சொல்லித் தரணும்.”

“இன்னும் எவ்வளவு தூரம்மா இருக்கு?”

“இதோ அவ்வளவுதான் பக்கத்துல வந்துட்டோம்.”

இருபது நிமிடத்திற்குப் பிறகு வயல்காடு சென்றடைந்தனர். அங்க மட்டும் கலர் கலர் லைட் எல்லாம் போட்டு ஜொலித்தது. வயல்காட்டுக்குள்ள பொங்கல் வைக்க ஆள் ஆளுக்கு ஓடிப்போய் இடம்பிடிக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் அந்த இடமே ஒரே புகைமூட்டமாக மாறிடுச்சு.

“நாம சொர்க்கத்துக்கு வந்திருக்கோமா அம்மா?” என்று அந்தப் பாப்பா சிரித்துக்கொண்டே கேட்டது.

அம்மாவும் புன்னகைத்துக்கொண்டே பொங்கல் பானையுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தாள்.

பொங்கல் பொங்கி வழிந்ததும், ஒவ்வொரு பானையும் இறக்கி வைக்கப்பட்டது.

“பொங்கல் வச்சாச்சு.. எல்லாரும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க!” என்று ஒருவன் குரல் கொடுத்தான்.

அதற்குள், கருப்பு வேட்டியும் கருப்புச் சட்டையும் அணிந்த சில ஆண்கள் கையில் பூஜைப் பொருட்களுடன் வந்தார்கள். ஒவ்வொரு பொங்கல் பானைக்கும் தனித்தனியாகப் பூஜை செய்யத் தொடங்கினர்.

அம்மா கைகளைக் கூப்பி நின்றாள்.

அருகில் நின்றுகொண்டிருந்த அந்தப் பாப்பா, அம்மாவை நைசாகத் தட்டியது.

“ஏம்மா.. நம்மளே பூஜை போடக்கூடாதா?”

“ஏன் பாப்பா?”

“நீதானம்மா பொங்கல் வச்ச… நீயே பூஜை போடலாமே. ஏன் இவங்க வராங்க?”

அம்மா சற்றுத் தயங்கினாள்.

“அது.. ஆம்பளைங்கதான் பூஜை போடணும்.”

“ஏன்?”

“அப்படித்தான் நம்ம ஊர் வழக்கம்.”

“பொம்பளைங்க பூஜை பண்ணுனா சாமி கண்ண குத்திடுமா?”

அம்மா உடனே அவளது வாயைப் பொத்தினாள்.

“சாமியைப் பற்றி இப்படியெல்லாம் பேசக்கூடாது பாப்பா. பேசாம சாமி கும்பிடு.”

பாப்பா அமைதியாகிவிட்டாள். ஆனால் அவளுடைய கண்கள் இன்னும் பல கேள்விகளுடன் அலைபாய்ந்துகொண்டே இருந்தது.

பெரிய கல் சிலையின் முன் எல்லாப் பொங்கல்களும் படைக்கப்பட்டன.

திடீரென்று…

“ஆஹ்ஹ்ஹ்ஹா..! “

என்ற  ஓர் அலறல் சப்தம்.

கூட்டம் திரும்பிப் பார்த்தது.

கறுப்பு உடையில் ஒருவர். கால்களில் சலங்கை, கையில் அரிவாள், கண்கள் சிவந்து விரிந்திருக்க, நாக்கை வெளியே நீட்டி, அரிவாளின்மீது ஏறி நின்றபடி வெறித்தனமாக ஆடிக்கொண்டிருந்தார்.

“சாமி வந்துடுச்சு!”

“கருப்பசாமி வந்துட்டாரு!”

“அய்யோ… சாமி!” என்று கூட்டம் முழுவதும் குரல்கள்.

சிலர் தரையில் விழுந்து வணங்கினர். சிலர் கைகளை உயர்த்தினர். சிலர் பயத்தில் குழந்தைகளைத் தங்களுக்குப் பின்னால் இழுத்துக்கொண்டனர்.

அந்தப் பாப்பா மட்டும் அந்த மனிதரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஏம்மா…”

“சும்மா இரு பாப்பா.”

“அவர் அருவா மேல ஏறி நிக்கிறாரே..?”

“அவருக்குள்ள சாமி வந்திருக்கு.”

“சாமி வந்தா அருவாமேலதான் ஏறி நிக்கணுமா?”

அம்மா அவளைக் கடைக்கண்களில் பார்த்தாள்.

“அப்படிக் கேட்கக்கூடாது. சாமி கும்பிடு.”

பாப்பா கைகளைக் கூப்பியவாறு அந்த அரிவாளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சலங்கையின் சத்தம் அதிகரித்தது.

“ஜல்…ஜல்…ஜல்…” என்று அந்தக் கூட்டத்திலிருந்த ஆண்கள் பலரும் அந்த அரிவாளில் ஏறி நிற்கப் போட்டி போட்டுக்கொண்டு ஆடினர்.

சில நிமிடங்களில் அந்த இடமே சலங்கை சத்தத்திலும் அலறல்களிலும் மூழ்கியது.

அந்தக் கூட்டத்தில் இருபது வயது பெண்ணொருத்தியும் திடீரென்று ஆடத் தொடங்கினாள். தலைமுடி கலைந்து, கண்கள் மூடியிருந்தன. உடல் நடுங்கியது.

“எனக்கு அருவா வேணும்…” என்று அவள் கத்தினாள்.

“எனக்கு அருவா வேணும்!”

அருகில் இருந்தவர்கள் அவளைப் பிடித்துக்கொண்டனர்.

“அவளுக்கு அருவா கொடுக்காதீங்க!” என்றது ஒரு கருப்புச் சட்டை.

“ஏன்?”

“கருப்பசாமி ஆடுறவங்களுக்கு மட்டும்தான் அருவா கொடுக்கணும். பெண்களுக்குள் கருப்பசாமி வரமாட்டார்.”

பாப்பா உடனே அம்மாவைப் பார்த்தாள்.

“ஏம்மா.. என்ன? கருப்பசாமி ஆண்களுக்கு மட்டும்தான் வருமா?”

அம்மா மௌனமாக இருந்தார்.

“பெண்களுக்கு வராதாம்மா?”

“அப்படித்தான் சொல்வாங்க.”

“ஏன்?”

“அது சாமியோட விஷயம்.”

“அப்போ இப்போ இந்த அக்காவுக்கு யாரு வந்திருக்காங்க?”

அம்மா மெதுவாக,

“பேயா இருக்கலாம்…” என்றாள்.

பாப்பா அந்தப் பெண்ணைத் திகைத்துப் பார்த்தாள். பிறகு அரிவாளையும் அங்கு ஆடிக்கொண்டிருந்த ஆண்களையும் மாறி மாறிப் பார்த்தாள். 

“அப்போ…”

அவள் மெதுவாகக் கேட்டாள்.

“ஆண்களுக்குச் சாமி… பெண்களுக்குப் பேய்… அப்படியா?”

அம்மா அவளைப் பார்த்து முறைத்தாள்.

“சத்தமா பேசாதே!”

அந்தப் பாப்பாவின் சந்தேகம் தீர்வதற்குள், “அவளுக்குள்ள பேய் இருக்கு!” என்று ஒருவன் கத்தினான்.

“பேய் ஓட்டணும்!”

“சாமி கோபப்படுவாரு!”

“அவளை வெளியே கூட்டிட்டு போங்க!”

அந்தப் பெண் இன்னும் கத்திக்கொண்டிருந்தாள்.

“எனக்கு அருவா வேணும்…”

சலங்கை சத்தமும் அலறல் சத்தமும் குலவைச் சத்தமும் அவளது குரலை அடக்கி ஓங்கி ஒலித்தது.

பாப்பா அம்மாவின் கையை இறுகப் பிடித்தாள்.

“ஏம்மா…”

“என்ன பாப்பா?”

“சாமிக்கு உண்மையிலேயே கோபம் வருமா?”

“பொண்ணுங்க பூஜை பண்ணுனா, சாமி குத்தமாம்.. அருவா மேல ஆம்பள நின்னா, சாமியாம்.. அதே அரிவாள ஒரு பெண் கேட்டா, பேயாம்.. அப்போ..” என்று மனதிற்குள் ஆயிரம் கேள்விகளுடன் பாப்பா சற்று அமைதியாக இருந்தாள்.

பிறகு, “சாமிக்கு ஆம்பள, பொம்பளன்னு வேறுபாடு தெரியுமா?” எனச் சட்டென்று கேட்டாள்.

அம்மாவின் மௌனமே அவளுக்குப் பதிலாகக் கிடைத்தது.

பயம், நம்பிக்கை, கேள்விகள், பதிலில்லாத பழக்கங்கள் இவையனைத்தும் அந்த இரவை மூழ்கடித்தன.

சிலர் சாமியைப் பார்த்துப் பயந்தார்கள். சிலர் சாமியாக நடித்து மற்றவர்களைப் பயமுறுத்தினார்கள்.

சிலர் பார்த்ததை நம்பினார்கள். சிலர் நம்பியதைப் பார்த்தார்கள்.

இப்படி ஒரு கூட்டத்தின் நடுவே அந்தச் சிறுமி மட்டும் எதையும் நம்புவதற்கு முன், “ஏன்?” என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.

அவள் தன் அம்மாவின் கையை விட்டுவிட்டு சற்று முன்னால் சென்றாள்.

அரிவாளின்மீது ஆடிக்கொண்டிருந்த கருப்புச் சட்டைகளின் கால்களையும், அவர்களின் காலடியில் படுத்துக்கொண்டிருந்த கூட்டத்தையும் பார்த்தாள்.

பிறகு..

அந்தப் பெண்ணைப் பார்த்தாள்.

சிறுமி மெதுவாகச் சிரித்தாள்.

அந்த சிரிப்பில் கேலி இல்லை.

பயம் இல்லை.

ஒரு கேள்வி மட்டுமே இருந்தது.

“சாமி என்றால் எல்லோருக்கும் ஒன்னுதானே?”

காலம் மாறியது.

விளக்குகள் மாறின.

வண்ணங்கள் மாறின.

ஆனால்… கேள்வி கேட்கத் தெரியாத கூட்டம் மட்டும் மாறவில்லை.

அந்தக் கூட்டத்திலிருந்து விலகி நின்ற அந்தச் சிறுமி மட்டும் இன்னும் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஏன்?”
அந்த ஒரு கேள்விதான்…

ஒருநாள், இந்தச் சாமியாட்டத்தை நிறுத்தப்போகும் முதல் அடியாக இருக்கப்போகிறது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button