
ஒத்தையில் நின்றான் வளவன்
பள்ளி வாசலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தவன், சாலையின் இருபுறமும் பார்த்தான். அப்பா இன்னும் வரவில்லை.
‘அப்பா எப்பவுமே இப்படித்தான். சரியான நேரத்திற்கு வரமாட்டார்’
‘என்னது எத்தனவாட்டி அவரிடம் சொல்லியிருக்கேன் பள்ளி விட்டதுமே வரனும்னு’, எரிச்சலாகி தனது அப்பாவை மனதிற்குள் திட்டினான்.
அந்தப் பின்லே பள்ளி முனை எப்போதும் பரப்பரப்பான இடம். பக்கத்திலேயே அரசு மருத்துவமனை, நகராட்சி என அது ஒரு முக்கூட்டுச் சாலை.
பள்ளிக்குள் போய் உட்கார முடியாது; அப்படியொரு சட்டம். வாசலில்தான் நிற்கவேண்டும்; எங்கேயும் போய்விடக்கூடாதென அப்பாவின் சட்டம். வளவனால் முடிவெடுக்க முடியாது கைபிசைந்து நின்றான்.
போகிற வருகிற பேருந்து, பைக், ஆட்டோ வரிசையாக நெருக்கடியாகச் சென்று கொண்டிருந்தன. அதனையும் டீக்கடையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றான். வளவனின் கண்கள் மட்டும் சாலையையே தேடிக்கொண்டிருந்தன.
அப்பா.
அப்பாவின் பைக்.
அப்பாவின் சட்டை.
அப்பாவின் முகம்.
டீக்கடைக்கு வந்த ஒருவரிடம் அவனின் அப்பாவின் செல் நம்பரை மனப்பாடமாகச் சொல்லி, கால் செய்தான்; போகவில்லை. ‘தொடர்பெல்லைக்கு அப்பால் இருக்கிறார்’ என்று இயந்திரப் பெண் குரல் சொல்லிக்கொண்டிருந்தது.
அன்னைக்கும் அப்படித்தான், “எனக்குச் சைக்கிள் வாங்கித்தாப்பா, நாந்தான் ஆறாப்பு வந்துட்டேன்ல. நீ அழைக்க வரவேண்டாம், நானே வந்துடேறேன்னு” சொன்னேன். சைக்கிளை இன்னும் வாங்கியே தரல.
ஆனா எனக்குப் படிப்புக்கு நோட்ஸ் கேட்காமலேயே வாங்கித் தரார். இவரு வேற மாரி ஆளு.
நேரம் ஆக ஆகப் பயம் கவ்விக்கொண்டது. அந்தியும் கருத்தது அவன் மனம்போல.
இப்படிப் புலம்பிக்கொண்டிருந்தவனுக்கு செல்வராசு அங்கிள் வந்ததும், “அங்கிள்” எனச் சத்தமாகக் கத்தினான். அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய மூன்று சக்கர வாகனத்தில் போக வளவனுக்கு மிகப் பிடிக்கும். அவனது அப்பாவுடன் வேலைப் பார்ப்பவர் செல்வராசு. முன்பெல்லாம் இருவரும் வந்தாலும் அவன் செல்வராசு அங்கிள் வண்டியில்தான் ஏறுவான்.
பயம் போய்விட்டது. தெரு விளக்குகளில் பளிச்சென வெளிச்சம் மின்னியது.
“வளவா டீ குடிச்சியாடா?”
இருவரும் டீ குடித்தார்கள். எப்போதுமே மாலை நேரத்தில் வளவனுக்கு பின்லே ஸ்கூல் எதிரில் இருக்கும் ஆவின் பூத்தில் டீயும் சுண்டல் வடையும் வாங்கித் தருவார். வடையைப் பிய்த்துப் போட்டு அதில் மசாலா சுண்டல் போட்டு சுள்ளென்றுத் தருவார்கள்.
‘எப்படி செல்வராசு அங்கிள்ட்ட இப்ப சுண்டலைக் கேட்பது?’ என யோசித்துக்கொண்டிருந்தான். அப்பா வராத நேரத்தில் அங்கிளிடம் சுண்டல் கேட்பது ஏதோ பெரிய குற்றம் செய்ததுபோலத் தோன்றியது.
“ஏன்டா அமைதியா இருக்கே?”
“ஒன்னுமில்ல அங்கிள்.”
டீ வந்தது.
நேரமாகிவிட்டதால் டீயை அவசர அவசரமாகக் குடித்தான். சூடு பொறுக்க முடியவில்லை.
“ஏன், ஒங்கப்பன் சீக்கிரமே போனானே. இன்னுமா அழைக்க வரல?”
“அவரு எப்பங்கங்கிள் சீக்கிரம் வந்திருக்கிறார்? எதிராப்புல வந்தா கூப்பிட்டுக்கலாம் அங்கிள்.”
“நல்லா படிக்கிறியாடா. தமிழே படிக்க வரலன்னு ஒங்கப்பன் வருத்தப்பட்டானேடா…”
“நீங்க வேற, நான் இப்பதான் படிக்கவே ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ள அங்க வந்து சொல்லிட்டாரா?”
“நீ நல்லா பேஸ்கட் பால் விளையாடுறீயாமே. அதையும் சொல்லி பால் வாங்கணும்னு சொன்னானே”
“அங்கிள் ஸ்போர்ட்ஸ் ஷூ கேட்டு பத்து நாளாகுது, அதுவே இன்னும் வரல”
இருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள். வளவனுக்குக் கவனம் அப்பா எதிரே வந்து விடப்போகிறார் என்றே இருந்தது. பேச்சிலும் ரோட்டிலுமாக கவனம் போனது அவனுக்கு. ஏற்கனவே இப்படி ஒருவருடன் வந்ததற்குத் திட்டு வாங்கியுள்ளான்.
அசேஷம் மெயின் ரோடு மிக நெருக்கடியான சாலை. காலையும் மாலையும் பள்ளி விட்டு பிள்ளைகளை அழைத்து வரும் வாகனங்கள், பள்ளி வாகனங்கள், கல்லூரி வாகனங்கள், மோட்டார் பைக்குகள் எனச் சாரை சாரையாகச் செல்லும். அப்போது சாமி மினிபஸ் ஹாரனைத் தொடர்ந்து அடித்துக்கொண்டே வேகமாக அவர்களைக் கடந்தது.
அசேஷம், அன்னை மாதா காலனி, வாசலில் இருக்கும் பெரிய அரச மரத்தின் கிளைகளை வெட்டியிருந்தார்கள். அதனருகில் இருக்கும் பிள்ளையார் கோயில் தற்போதுதான் கும்பாபிஷேகம் நடந்து மிகுந்த வண்ணமயமாக இருந்தது.
வாசலிலேயே கூட்டமாகச் சிலர் நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். என்னவோ ஏதுவோவென்று செல்வராசு, கால் தாங்கும் குச்சியை ஊன்றிக்கொண்டு வந்து பார்த்தார்.
வளவனின் அம்மா, யாருடனோ இருந்ததாகச் சந்தேகப்பட்டு அடித்தே கொலை செய்துவிட்டு, தூக்கு மாட்டிக்கொண்டார் வளவனின் அப்பா. ரத்தவெள்ளத்தில் அம்மா.
என்ன ஏதென்று புரியாமல், எப்போதும் பார்க்கும்
அதே வாசல்,
அதே சுவர்,
அதே கதவு,
ஆனால் வீடு மட்டும் இப்போது அவனுக்குத் தெரியாத ஒன்றாகி இருந்தது. யார் யாரோ கூடி நின்றார்கள்.
அந்த வீட்டு வாசலைப் பார்த்துக்கொண்டே வளவன் ஒத்தையில் நின்றான்.



