இணைய இதழ் 127சிறுகதைகள்

இருப்பதாக – பத்மகுமாரி

சிறுகதைகள் | வாசகசாலை

அவள் பேசிக்கொண்டிருந்ததை அவளது தொனியிலேயே அதே முகப்பாவங்களோடு அவன் நடித்துக் காட்டினான்.

“இது நக்கல் பண்றதுலியா வருது?”

“ஆமா. இல்லையா பின்ன?”

அவனது இடதுகையில் கிள்ளி வைத்தாள்.

அவள் கிள்ளியிருந்த இடத்தின் வலியைத் தேய்த்துவிட்டபடியே அவனுடைய கண்கள் அவளைப் பார்த்துப் புன்னகைத்தது.

“ரசிக்கிறதுக்கும் நக்கல் பண்றதுக்கும்கூட வித்தியாசம் தெரியாத லூசுடி நீ”

இப்படியானதொரு காட்சி கனவாக வந்திருந்ததின் அசட்டுத்தனத்தை நினைத்தபடியே விழித்துக்கொண்ட துளசி தலையணையருகே துளவி கைப்பேசியை அடைந்தாள். அவள் எழுந்துகொள்ள வேண்டுமென்று முடிவு செய்திருந்த நேரம் கடந்திருந்தது. பதிவு செய்துவைத்திருந்த அலாரம் அணைக்கப்பட்டிருந்தது எப்படியென்கிற பிரக்ஞை அவளிடத்திலில்லை.

அவசரமாக எழுந்துகொண்டவள் அடுத்தடுத்த வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள். அவளது வாழ்வின் முக்கிய நாளாக இந்த நாள் மாறவிருக்கிறது.  அவளது அம்மாவின் பத்தாவது ஆண்டு நினைவுதினம்.

***

அம்மா இறந்துபோன இந்தப் பத்து வருடங்களில் துளசி நான்கு ஊர்களை மாற்றியிருந்தாள். எதேச்சையாக இல்லை; திட்டமிட்டே நடத்திக்கொண்டாள்.

அம்மாவைச் சாம்பலாக்கிவிட்டுத் திரும்பியிருந்த இரவு அவள் எடுத்திருந்த முடிவு அது. ஏற்கனவே வாழ்ந்திருந்த வாழ்வுமுறைதான் என்றபோதும் மீண்டும் அதனைத் தொடர்வதற்கு அவளுக்கு வேறு காரணங்கள் கிடைத்திருந்தன.

துளசியின்  பதினைந்தாவது வயதில் அம்மா நிலையில்லாத அந்த ஓட்டத்தைத் தொடங்கியிருந்தாள். 

குடிகாரனை மணமுடித்து வந்திருந்த  அம்மா, துளசியின் இரண்டரை வயது வரையிலும் தனது  கணவனின் குடி விழுங்காமல் சிதறிய சில்லறைகளை நம்பியே வாழ்வை ஓட்டிக்கொண்டிருந்தாள். அன்றைய இரவிற்குக் குடிக்கு எதையும் மிச்சம் வைக்காமல் வீடு திரும்பியிருந்தவன்  இரவின் மிச்சப் பசிக்கு மனைவியை இரையாக்கிக்கொண்டிருந்தான். அவனது பிடியில் மாட்டியிருந்தவள் அருகில் பசியில் அழுதுகொண்டிருந்த குழந்தையின் முகத்தைவிட்டு கண்களை அகற்றாமல் உணர்ச்சிகளற்று கிடந்தாள். அதன்பிறகான நாட்களில் கணவனின் மிச்சங்களுக்குக்  காத்திருப்பதை  அவள் நிறுத்திக்கொண்டாள். தனது மிச்சத்தைக் கணவன் இரையாக்கிக்கொள்வதையும்  நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவளால் நிகழ்த்திவிடமுடிந்திருந்தது.

துளசியின் நான்கு வயதில் அப்பா வீட்டிற்கே திரும்பாத இரவென்று ஒன்று வந்தது. அவளது அம்மா கணவனை எங்கும் தேடவில்லை. அவன் வீடு திரும்பாததைப்பற்றிய எந்தப் புலம்பல்களும் அவளிடத்திலிருந்து வரவில்லை. வேர்வை சிந்தி எடுத்துவரும் பணத்தை  மறைத்துவைக்கத் தினம் ஒரு புது இடம் தேடவேண்டியதில்லை என்பதை நினைத்து ஆசுவாசப்பட்டுக்கொண்டாள்.

துளசிக்குப் படிப்பிலிருந்த கெட்டிக்காரத்தனம் அம்மாவிற்கு மகிழ்ச்சியைத் தந்திருந்தது. அதன் உத்வேகத்திலேயே இன்னும் அதிகமான வீடுகளில் உழைத்தாள். துளசியின் சின்ன ஆசைகளைக்கூட உணர்ந்து நிறைவேற்றி வைத்தாள்.

துளசி பள்ளியிலிருந்து திரும்பிய சாயங்காலம் ஒன்றில் அம்மா துளசிக்கு முன்பாகவே  வீடு வந்து சேர்ந்திருந்தாள்.  அம்மாவை அவள் பதினொரு வருடங்களாக வேலை பார்த்துக்கொண்டிருந்த வீட்டிலிருந்து திருட்டு பழி சுமத்தித் துரத்தியிருந்தார்கள்.  அவள்மீது பழியேற்றுவதற்கு சந்தர்ப்பங்கள் கச்சிதமாகத் துணை நின்றிருக்கின்றன. எதையோ இழந்தவளாகச் சுவரோடு சாய்ந்தபடி குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த அம்மா இரவின் மொத்த இருட்டையும் வெறித்துக்கொண்டிருந்தாள். விழுந்திருந்த பழி அதோடு முடிந்திருக்கவில்லை. ஊரார் வாய்களும் அங்குமிங்குமாக அதனை வழிமொழிய ஆரம்பித்திருந்தன. அம்மா எந்தப் பேச்சுகளையும் காதில் போட்டுக்கொள்ளாமல் இருப்பதற்கு முடிந்தவரையிலும்  முயன்றாள். பேச்சுகள் துரத்திக்கொண்டேயிருந்தன. ஏற்கனவே வேலைபார்த்துக்கொண்டிருந்த இரண்டு வீடுகளில் அந்த மாதத்திற்கான சம்பளத்தோடு அவளை வேலையிலிருந்து துண்டித்திருந்தார்கள். அம்மா எப்போதும் யோசனையிலேயே இருக்கத் தொடங்கியிருந்தாள். அவள் துளசியோடு உரையாடுவதுகூட குறைந்து போயிருந்தது.

“நம்ம, உனக்கு பரீட்சை முடிஞ்ச கையோட வேற ஊருக்குப் போறோம். அங்க புது ஸ்கூல் தேடி அம்மா உன்ன சேத்துவிடுகேன்”

துளசி சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டிலிருந்த பார்வையை அம்மாவின் முகத்திற்கு நகர்த்தினாள்.

அம்மா அதற்குமேல் எதுவும் பேசவில்லை. எழுந்து அடுக்களைக்குள் போய்விட்டாள்.

ஏழு வருடங்களில் அவர்கள் நான்காவது ஊருக்கு மாறியிருந்தார்கள். எந்த ஊரிலும் அவர்கள் இரண்டு வருடங்களுக்குமேல் நிலைக்கவில்லை. எந்த ஊர்களிலும் அம்மா வீட்டு வேலைகளுக்கும் செல்லவேயில்லை.  கட்டட வேலைகளுக்கு மட்டுமே சென்றாள். எந்த மனிதர்களையும் அவள் நெருக்கத்தில் அனுமதிக்கவில்லை. உடன்  வேலை பார்ப்பவர்களிடமும் வேலை நேரத்தில் நடத்தும் அவசியமான பேச்சுவார்த்தை தாண்டி எதுவும் நெருக்கம் காட்டுவதில்லை. அவர்களின் வாழ்வு இருவருக்கான உலகமாக மாறிப்போயிருந்தது.

துளசிக்கான பணியை அவள் கண்டடைந்தபோது அதே ஊரில் தொடர்ந்துகொள்ளலாமென்பதாக அவள் அம்மாவிடம் கேட்டாள். அம்மா எதற்காக இந்த இடமாற்றத்தை விடாமல் நடத்திக்கொண்டிருக்கிறாள் என்பதற்கான காரணத்தைச் சொன்னதில்லை என்கிறபோதும் துளசியிடம் அதற்கான யூகங்கள் இருந்தன.

“இங்கேயேவா? எப்பயுமேவா?”

அம்மா மிகுந்த வருத்தத்தோடு கேட்டாள்.

“ஆமா”

அம்மாவின் முகத்தில் வருத்தம் அதிகரித்தது.

துளசி அம்மாவின் வலது புறங்கையைத் தன்னுடைய கைகளுக்குள் பொத்திக்கொண்டாள். அம்மாவின் புறங்கைச் சூடு துளசியின் உள்ளங்கையில் இறங்கியது.

“உன் விருப்பம் அதான்னா செய்வோம். அத்தன வருஷத்துக்கும் ஒரே ‘நான்’ அ காப்பத்தணுமே.  அதை யாரும் உடச்சிருவாளோன்னு பயந்து கெடக்கணுமேன்னுதான் யோசிக்கிறேன்”

அம்மா பெருமூச்செறிந்தாள்.

அம்மாவின் இடமாறுதலுக்கான அடிநாதம் அந்த நிமிடத்தில் துளசிக்குச் சரியாக விளங்கியது.

“நம்ம வேணுணா இந்தச் சிட்டிக்குள்ளேயே ரெண்டு வருஷத்துக்கொருக்கா வேற வேற ஏரியாக்கு மாறிக்கலாம்”

துளசி அம்மாவின் வருத்தத்தைக் குறைக்கும்பொருட்டு சொன்னாள்.

அம்மா சரியென்பதாக வேகமாகத் தலையசைத்தாள்.

அம்மாவைப்போல யாருக்கும் சிக்காத “நானை”  குழிழியாக ஏந்திக்கொள்ளும் வித்தை துளசிக்குப் பிடிபட்டிருக்கவில்லை. அவளுக்குப் பிடிமானமான உறவுகள் தேவையாயிருந்தது. அம்மாவும் அவளும் என்பதான உலகம் அழுத்தியது. துளசி அவளுக்கான “நானை” தீனிபோட்டு வளர்த்தாள். அதனை ஆராதித்த ஒருவனை அவளுடையவனாக எண்ணத் தொடங்கினாள். அவனின் பேச்சுகளில் திளைத்துக்கிடந்தாள். ஒருவர் மற்றொருவரை இறுகப் பற்றியபடி நான்கு  வருடங்களைக் கடந்திருந்தார்கள். துளசியின் பக்கமிருந்து திருமணத்திற்கான அழுத்தத்தை அவள் விடாப்பிடியாக நகர்த்த ஆரம்பித்தபோது அவன் அவளைவிட்டு மெல்ல விலக ஆரம்பித்தான்.

“இந்த அம்மா ஏன் இப்படியிருக்கா. மக ஒருத்தன விரும்புகதா சொன்னாளே அத அதுக்கு மேல என்ன ஏது எப்ப கல்யாணம் முடிப்பீங்கன்னுகூட இதுவரைக்கும் ஒரு கேள்வி கேக்கல. இப்படி எதுமேலயும் ஒட்டுதல் இல்லாம எப்படிதான் அம்மாவால இருக்க முடியுதோ”

கல்யாணத்தைப் பற்றிப் பேசியே தன்னை துளசி நச்சரிப்பதாக அவளது காதலன் அவள்மீது புகார் பதித்து அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை வாசித்த இரவில் துளசிக்கு அம்மாவின்மீது கோபம் எழுந்தது.

அவன் துளசியிடம் தெரிவிக்காமலேயே அலுவலகத்திலிருந்து நின்றிருந்தான். அவளது வாழ்விலிருந்தும் அவனது சுவடுகளை மொத்தமாக நீக்கியிருந்தான். நான்கு வருடங்களில் அலுவலகத்தைத் தாண்டி அவனுக்கான நபர்களான யாரிடமும் தன்னை ஏன் அவன் அறிமுகப்படுத்திவைக்கவில்லை என்பதைப்பற்றி அவள் முதல் முறையாக யோசித்தாள். கடந்து வந்திருந்த நான்கு வருடங்களும் அவளுக்கு வேறு நிறத்தில் தெரிய ஆரம்பித்திருந்தது.

“ஒருத்தி கெடந்து அழுகுறனே ஏன்னுகூட கேட்கமாட்டியா?”

மடியில் படுத்து அழுதுகொண்டிருந்த அவளது   தலையை அமைதியாகக் கோதிக்கொண்டிருந்த அம்மாவிடம் எரிந்து விழுந்தவள் வெடுக்கென எழுந்தமர்ந்தாள்.

“என்னால ஆனமட்டுக்கு உனக்கு நல்லது கெட்டது சொல்லி வளத்து விட்டாச்சு. உன்ன நல்லா படிக்கவும் வச்சாச்சு. உனக்குன்னு ஒரு வேலையும் அமஞ்சிட்டு. இனி உனக்கு ஏத்தமோ எறக்கமோ உனக்கு பாத்துக்கிட தெரியும்; தெரியணும். அதுல நான் தலைய கொடுத்தா என் சாயம்லா உன் மேல ஒட்டிரும். ஒரு துணில இன்னொரு துணி சாயம் ஒட்டுனா நல்லாவா இருக்கும்?”

தீர்க்கமாக இருந்த அம்மாவின் பார்வையை விழுங்கிக்கொள்ள முடியாமல் துளசி தனது பார்வையை வேறு திசைக்கு மாற்றிக்கொண்டாள்.

அதன்பிறகான நாட்களில் துளசி தனது முடிவுகளில் அம்மாவின் தலையீடு இல்லையென்பதைப் பற்றி புகார் பட்டுக்கொள்வதில்லை. தனது நான்கு வருடங்களை தின்றவனைக் கூடுதல் தீவிரத்தோடு வெறுத்தபோதிலும் அவளால் அவனது நினைவுகளிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள முடியவில்லை.

தன்னை மடைமாற்றிக்கொள்ள இசைக் கச்சேரிகளுக்குப் போக ஆரம்பித்தாள். புதிய நட்பு வட்டத்தை உருவாக்கினாள். எல்லாவற்றையும் மீறி நினைவு சுழல் அவளை விடுவிப்பதாயில்லை. அவள் விடாமல் முயன்றுகொண்டேயிருந்தாள்.

புது நட்புவட்டத்திலிருந்த சுகந்தனின் பேச்சுகள் துளசியை மெல்ல வசீகரிக்க ஆரம்பித்தது. அவன் அவளது ரசனைகளுக்குத் தீனிபோடும் அறிவினைக் கொண்டவனாக இருந்தான்.  கச்சேரிக்கு வெளியிலும் அவர்கள் சந்திக்க ஆரம்பித்தார்கள். நிறையப் பேசினார்கள்.  எதைப்பற்றிப் பேசியபோதும் சுகந்தனிடமிருந்து புதிதாய் தெரிந்துகொள்ள அவளுக்கு ஏதேனும் ஒன்று இருந்துகொண்டேயிருந்தது. அவளுள் புதிய உற்சாகம் பிறக்கத் தொடங்கியது. அம்மாவிடமும் சுகந்தனை நண்பனாக அறிமுகப்படுத்திவைத்தாள். அதே குடும்ப அறிமுகம் எதிர்புறமும் நிகழ்ந்தபோதுதான் இன்னொரு முறை ஏமாற்றமடையப்போவதில்லை என்பதை நினைத்துக் கூடுதலாக மகிழ்ந்தாள். பழைய உறவின் சாயல் புதிய உறவில் எங்கேனும் வெளிப்படுகிறதா என்பதனை அவ்வப்போது மூன்றாம் கண் கொண்டு அவதானித்துக்கொண்டாள். அவ்வாறில்லையென்று உறுதியான ஒவ்வொரு முறையும் நம்பிக்கையை அதிகப்படுத்தினாள்.

இருவருக்குமான நெருக்கம் அதிகரித்திருந்த பொழுதொன்றில் சுகந்தனே திருமணத்தை பற்றிய பேச்சினை முன்னெடுத்தான். வீட்டில் பேசுவதாகவும் சொன்னான்.  அவளும் அம்மாவிடம் பேசுவதாகச் சொன்னாள்.

துளசி அம்மாவிடம் பேசியபோது அம்மா ஏற்கனவே அறிந்திருந்த ஒன்றை இரண்டாம் முறையாகச் செவிமடுப்பதான அமைதியோடு கவனித்துக்கொண்டிருந்தாள்.

“எம்மா உனக்கு நான் என்ன சொல்றேன்னு புரியுதுல”

“ம்ம்”

“எதுவுமே சொல்ல மாட்ற”

“உன் முகத்தில இருக்க முழுச் சந்தோஷத்தையும் ரசிச்சிட்டு இருக்கேன்.”

துளசி அம்மாவை இறுகக் கட்டிக்கொண்டாள்.

துளசி அம்மா சம்மதம் தெரிவித்துவிட்ட மகிழ்ச்சியில் பேசிக்கொண்டேயிருந்தாள். சுகந்தன் பெரும் அமைதியோடு அமர்ந்திருக்கிறான் என்பதனை அவள் அவதானித்துக்கொள்ள நேரம் பிடித்தது.

“என்னாச்சுடா? நான் பேசிட்டேயிருக்கேன். நீ பதிலே பேசமாட்ற?”

அப்போதும் அவனிடத்திலிருந்து பதிலில்லை.

அவளும் அமைதியைத் தொடர்ந்தாள்.

“வீட்டில பேசினேன்.  அம்மா, அப்பா ரெண்டு பேருக்குமே இதுல விருப்பமில்ல”

“சரி, அதனால?”

“பேக்ரவுண்ட் இல்லாத பேமிலிலே எப்படின்னு…”

“புரியுது. அடுத்து என்ன பண்ணலாம் நினைக்கிற.  அத சொல்லு”

“அம்மா அப்பாக்கு விருப்பமில்லாம எப்படின்னு யோசிக்கிறேன்”

“அவங்க விருப்பமில்லாம நம்ம ஒன்னும் நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லையே.  வெயிட் பண்ணலாம்”

“வெயிட் பண்ணாலும் மாறுவாங்கன்னு தோனல”

“வெயிட் பண்ணி பாக்காமலேயே அந்த முடிவுக்கு வர்றது எப்படி?”

“உங்க அம்மா, அப்பா யோசிக்கிறது ரெண்டாவது விஷயம் சுகா. உன் பேச்சில புதுசா ஒரு தடுமாற்றம் தெரியுதே. அதுதான் என்னன்னு எனக்கு புரியல”

சுகந்தன் அமைதியாக இருந்தான்.

அவன் அமைதி களைய அவள் காத்திருந்தாள்.

“நம்ம நல்ல ப்ரண்ட்ஸாவே இருந்திடலாமே துளசி”

அவள் அமைதியாக இருந்தாள்.

“ஏன் அமைதியா இருக்க.  நான் உன்கிட்ட நடந்தத ஓப்பனாதான டிஸ்கஸ் பண்றேன். எதையும் மறைக்கலையே”

“நல்லா இருக்கு. உன் ஓப்பன் டிஸ்கஷன்.  நீ முடிவெடுத்திட்டு வந்தத என்ன ஒத்துக்க வைக்க பேசிட்டு இருக்க”

“அப்படியில்ல துளசி..”

“ஸீ.. எனக்கு இந்தச் சுத்தி வளச்ச பதில்லாம் வேண்டாம்.  உனக்கு இனிமே இந்த லவ் வேண்டாம். அதான?”

“உன்ன விட்டுட்டு போணும்ன்னு நான் நெனைக்கல.  லெட் அஸ் பீ ப்ரண்ட்ஸ்”

“ப்ரண்ட்ஸ்?”

அவளது சிரிப்பு உடைந்தது.

“என்னால நீ இல்லாம மொத்தமா இருந்திட முடியாது.  அதே நேரத்தில அம்மா அப்பா பிடிவாதத்த பத்தியும் எனக்குத் தெரியும்”

“அப்ப நீ அவங்க பிடிவாதம் பண்ணுவாங்களா இல்லையான்னு தெரிஞ்சிட்டு வந்துல என்ன லவ் பண்ணியிருக்கணும்”

“இப்ப என்ன உனக்கு? ஆர்க்யூ பண்ணனுமா?”

“நாட் அட் ஆல்”

அமைதியாக இருந்தார்கள்.

“ஓகே சுகந்தன்.  எனக்கு ப்ரண்ட்ஸா இருக்க ஓகேயில்ல.  உனக்கு உன் வீட்டுல பிடிவாதம் பண்ண ஓகேயில்ல”

அவனிடமிருந்து பதிலில்லை.  குனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“நான் கிளம்புறேன்”

அவர்கள் அமர்ந்திருந்த பூங்காவிலிருந்து அவள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தாள். அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து நகராமல் அவள் செல்வதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இரண்டு நாட்களுக்குப்பிறகு அவன் அவளைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவள் பதிலளிக்கவில்லை. அதற்பிறகான நாட்களிலும் அவன் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகளை அனைத்தையும் அவள் விடாமல் தோற்கடித்தாள்.

அவளுக்குள் மீண்டும் நினைவிலிருந்து மீட்டுக்கொள்ளும் போராட்டம் தொடங்கியிருந்தது. புது முயற்சிகள்; புதுத் தோல்விகள். ஒரு நாள் அவனிலிருந்து விடுபட்டவளாக உணர்ந்தாள். மறுநாளே அவனது நினைப்பில் இன்னும் கூடுதலாகச் சிக்கிக்கொண்டாள். அவனோடு இருந்த பொழுதுகளை அணு அணுவாக வெறுத்தாள். மீள்வதும் தொலைவதுமாகத் தனக்குள்ளாகவே போராடினாள்.

அம்மாவோடு அமர்ந்து காபி அருந்திக்கொண்டிருந்தபோது துளசியின் கட்டுப்பாட்டை மீறி அவளது இடது கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. சட்டென துடைத்துக்கொண்டாள்.

“அவன் நெனப்பு வந்திட்டா?”

அம்மா நிதானமாகக் கேட்டாள்.

துளசி ஆமாம் என்பதாகத் தலையசைத்தபடி பார்வையைக் கீழ் தாழ்த்திக்கொண்டாள்.

“உங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு நான் கேட்கமாட்டேன். அது உனக்கும் தெரியும். ஆனா வேற ஒன்னு கேக்கணும். கேக்கலாமா?”

“ம்ம்”

“அவன்கூட திரும்ப சேந்துக்கணும்னு ஆசப்படுறியா?”

“இல்ல”

அம்மாவின் கேள்விக்குத் துளசியிடமிருந்து கோபமாகப் பதில் வந்தது.

“அவன் மேல இன்னமும் அன்பிருக்கா?”

“தெரியல”

“வெறுப்பு?”

“நெறையவே”

“அப்புறம் எப்டி நெனப்பு அழியும். அன்போ வெறுப்போ ரெண்டுமே கால்ல கெட்டுன சங்கிலிதான. அறுத்துவிடணும்னா அலட்சியப்படுத்த தெரியணும்”

துளசி நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தாள்.

“அதுக்கு முதல்ல உனக்கு உன்ன அலட்சியப்படுத்தத் தெரியணும். எதுனாலும் உள்ள இருந்துதான் வெளிய பரவணும். அப்பதான்  பூரணமாயிருக்கும்”

அம்மா காலியாகியிருந்த காபி டம்ளர்களோடு எழுந்துகொண்டாள். அதுதான் துளசியும் அவளது அம்மாவும் நடத்தியிருந்த கடைசி நீண்ட உரையாடல்.

அன்றிலிருந்து ஐந்தாவது நாள் அம்மா தவறியிருந்தாள்.

வழக்கமான இறந்த வீட்டிலிருக்கும் எந்த ஓலமும் அங்கில்லை. அம்மாவை ஹாலின் நடுவில் கிடத்தியிருந்தாள். துளசியின் அழுகை அமைதியாகக் கன்னத்தில் இறங்கிக்கொண்டிருந்தது. இரண்டு தோழிகள் மட்டும் உடனிருந்தார்கள். அம்மாவை மின்சாரத் தகனம் செய்து திரும்பியபோது அவர்களும் வேறு வேலைகள் இரு‌ப்பதாகச் சொல்லிக் கிளம்பியிருந்தார்கள்.

மனிதர்களை நெருக்கமாக்கிக்கொள்ளும் வித்தை தனக்கு வாழ்நாள் முழுவதும் புலப்படாமலேயே போய்விட்டதோ என்று அவள் யோசிக்க ஆரம்பித்திருந்தாள். எங்கோ தவறிவிட்டோமென்று அவளுக்கு ஆணித்தரமாகத் தோன்றியது. நிறைய யோசித்தாள்.

முதல் நகர்வாக வேறு நகரத்திற்கு வேலையை மாற்றிக்கொண்டாள். இடமாறுதல்களை விடாமல் நிகழ்த்திப் பார்த்தாள். வெவ்வேறு மொழி பேசும் நகரங்களில் வசித்தாள். ஒவ்வொரு நகரத்திலும் ஏற்படுத்திக்கொள்ளும் நட்புகளோடு எப்போதும் தொடர்பிலிருந்தாள். அவளுக்கான மனிதர்களைக் கைநிறைய சேர்த்துக்கொண்டவள் எட்டு வருடங்களுக்குப் பிறகு அம்மா இறந்தபோது இருந்த நகரத்திற்கே திரும்பியிருந்தாள். நட்பு வட்டத்தை இன்னும்கூட விரித்துக்கொண்டாள்.

***

அன்றைக்கான காலை வேலைகளை முடித்திருந்தவள் புக் செய்திருந்த டாக்சி வருவதற்காகக் காத்திருந்தாள். இரண்டு வயது பெண் குழந்தைக்கு அம்மாவாக வேண்டுமென்று தனது முப்பத்தெட்டாவது பிறந்தநாளன்று முடிவெடுத்திருந்தவள் அன்றிலிருந்து அதற்கான நகர்வுகளை ஆரம்பித்திருந்தாள். கல்யாணமாகாத ஒருத்தி ஆதரவற்ற ஒரு குழந்தையின் அம்மா என்கிற அங்கீகாரத்தை அடைவதற்கு நிறையக் கடக்க வேண்டியிருந்தது.  இரண்டு வருடங்களாக அதனை அவள் பொறுமையாகவும் மிகுந்த கவனத்தோடும் கையாண்டு இன்றைய தினத்தை அடைந்திருந்தாள்.

அவளது தோழியிடமிருந்து அழைப்பு வந்தது.

“கிளம்பிட்டியா?”

“ம்ம்”

“இப்பகூட டைமிருக்கு, யோசிச்சுக்கோ. அடாப்ஷன் ஓகே. பட் நாப்பது வயசில ரெண்டு வயசு குழந்தைங்கிறது… கொஞ்சம் வயசு அதிகமான குழந்தையான சரியா இருக்குமோ தோணுது. இவ்வளவு பெரிய காரியத்த பண்ணபோறதா கடைசி  நிமிசத்தில நேத்து வந்து சொல்ற. முன்னாடியே சொன்னாகூட பேச டைமிருந்திருக்கும்”

“அதுக்குதான முன்னவே சொல்லல”

துளசி பதில் பேசவில்லை. இலேசாகப் புன்னகைத்தாள்.

“திமிருபிடிச்சவ. என்ன சத்தத்தையே காணோம்”

“இப்ப சிரிச்சிருப்பியே?”

“ஆமா”

“ரைட்டு.  அப்ப ரெடி ஆயிட்ட?”

“பூரணமா?” துளசி புக் செய்திருந்த கேப் வந்திருந்தது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button