சிறார் இலக்கியம்
Trending

வானவில் தீவு-12 [ சிறார் தொடர்]- சௌம்யா ரெட்

இதுவரை…

தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக அந்த ஊர்ச் சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்தனர். கடலின் ஓரிடத்தில் இருந்த பெரிய கதவை இறகை வைத்துத் திறக்கும் முயற்சி தொடர்ச்சியாகத் தோல்வியிலேயே முடிந்தது. அடுத்து கதவு கேட்ட விடுகதைக்கு பதில் தெரியாமல் குழம்பித் தவித்தனர்.

இனி…

அம்மு மீன் திடீரென அதிர்ந்து கத்தியது. ஆனால் அது நல்ல விஷயம் தான்.

அம்மு மீன்: மகேஷ் கையில இருக்கிற கேரட்டும், கதவு உச்சில தாழ் மேல இருக்கிற உருவமும் ஒரே மாதிரி இருக்கு. எல்லாரும் பாருங்க!

கரண்டு: இந்த அம்மு மீன் மட்டும் எங்கிருந்து இதெல்லாம் கண்டுபிடிக்குது. யப்பா சாமி புல்லரிக்குதுப்பா.

அம்மு மீன்: ஒரே பக்கமா இல்லாம சுத்திச் சுத்தி கவனிக்கறது தான். நீங்க எல்லாம் பேசிட்டே இருக்கீங்க. எனக்கு பேசப் பிடிக்கறதில்ல, அதான் வேடிக்க பாக்கறேன்.

ராம்: அப்போ… விடுகதைக்குப் பதில் கேரட்டா?

பாலா: இது வெள்ளை நிறமா?

இரும்பு மண்டையன்: இல்ல, இது ஆரஞ்சு நிறம்.

திடீரென நினைவு வந்தவனாய் இரும்பு மண்டையன் கத்தினான்.

“வாவ். அப்போ அது முள்ளங்கி”

எல்லோரும் பேசி அந்த பதிலுக்கு ஒப்புக் கொண்டார்கள்

ராம்: மிங்க்லீ கதவே! நீ கேட்ட முதல் விடுகதைக்கான பதில் ‘முள்ளங்கி’.

மிங்க்லீ கதவு: சரியான பதில். அடுத்த விடுகதைய கேக்குறேன். ‘கண்ணில் காண உருவம் உண்டு, கட்டிபிடிக்க உடல் இல்லை’ அது என்ன?

பாலா: இது இன்னும் கஷ்டமா இருக்கும் போல.

மகேஷ்: யோசிப்போம்.

ராம்: கண்ணால பாப்போம், ஆனா தொட முடியாது. நிழலா?

பாலா: சூப்பர்டா! நிழல் தான்னு நானும் நினைக்கிறேன்.

திரும்பவும் எல்லோரும் கலந்து ஆலோசித்து, ஒரு மனதாக ‘நிழல்’ என்ற விடையை ஒப்புக்கொண்டனர்.

ராம்: மிங்க்லீ கதவே… ரெண்டாவது விடுகதைக்கான பதில் ‘நிழல்’.

மிங்க்லீ கதவு: தவறான பதில், இன்னும் உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள்தான் இருக்கு.

எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆளாளுக்கு பேசியதில் அந்த இடமே கலவரமாக இருந்தது.

மகேஷ்: அதுக்கான விடை புகையா?

எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

லூனா: புகை தான் சரியான விடையா தெரியுது.

அம்மு: ஆமா, நிழலை விட புகை தான் சரியா இருக்கும்னு தோணுது.

எல்லோருக்கும் சரி என்று பட்டாலும், ஏற்கெனவே ஒரு முறை தவறாகி விட்டதால், ரிஸ்க் எடுக்க பயப்பட்டனர்.

ராம்: இப்படியே பயந்துட்டு இருந்தோம்னா, ஒண்ணும் பண்ண முடியாது. சொல்லிதான் பார்ப்போம்.

மிங்க்லீ கதவே… இரண்டாவது விடுகதைக்கான பதில் ‘புகை’.

மிங்க்லீ கதவு: சரியான விடை சொன்னதற்கு வாழ்த்துகள்.

எல்லோரும் ‘ஓ’வென்று சத்தம் போட்டுக் குதூகலித்தனர்.

அம்மு: ஆமா மகேஷ்… புகை தான் விடைனு எப்படி யூகிச்ச?

மகேஷ்: ஊர்ல ஒரு நாள் சாயங்கால நேரத்துல காட்டுப் பக்கம் போனேன். அங்க தூரத்துல யாரோ நிக்கிற மாதிரி இருந்தது. யார்னு பாக்கலாம்னு பக்கத்துல போன அப்றம்தான் தெரிஞ்சது, அது ஆள் மாதிரியே இருந்த புகை. அன்னைக்கு நான் வாங்குன பல்பு தான் இன்னிக்கு இந்த வெற்றிக்கு காரணம். ஹா… ஹா…

இப்படி பில்டப்பா சொல்லி முடிச்சான். எல்லோருக்கும் அவன் சொன்ன விதம் கொஞ்சம் காமெடியாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தது.

மிங்க்லீ: சரி இப்போ இரண்டு தாழ்கள் திறந்துவிட்டன. மூன்றாவது நீங்க தான் கண்டுபிடிக்கணும்.

ராம்: எதுவுமே ஹின்ட் இல்லாம எப்படி கண்டுபிடிக்கறது மிங்க்லீ. ஏதாச்சும் உதவி பண்ணு ப்ளீஸ்.

மிங்க்லீ: நான் உதவி செய்யக்கூடாது. ஆனா அதை திறப்பது ரொம்ப சுலபம். ஏற்கெனவே நீங்க சொன்ன பதில்கள் உதவும்.

இப்படி சொல்லிட்டு மிங்க்லீ பழையபடி அமைதியாகக் கண்களை மூடிக் கொண்டது.

அம்மு: சரி வழக்கம் போல, ஏதாவது சொல்லி கூப்பிட்டுப் பாருங்க. நாம பேசறத கேக்குதானு பார்ப்போம்.

இரும்பு மண்டையன்: மிங்க்லீ சொன்னதில்ல? முதல் இரண்டு பதில்கள் உதவும்னு, அதயே சேர்த்து கூப்பிட்டு பாரு ராம்.

ராம்: ம்ம்ம்.. முள்ளங்கி புகையே, தாழைத் திற.

தாழ் திறக்க ஆரம்பித்தது. எல்லோரும் அதிசயித்து நின்றனர்.

 

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button